கடந்த பிப்ரவரியில் உச்சநீதிமன்றம், காவிரி நதி நீரை பங்கீடு செய்து கொள்வதற்காக புதிய செயல் திட்டம் ஒன்றை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி மத்திய அரசு கடந்த மாதம் “காவிரி நீர் மேலாண்மை ஆணையம்” அமைத்து, புதிய வரைவு செயல் திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதை தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் ஏற்றுக் கொண்டன.
மத்திய அரசு வகுத்துள்ள செயல் திட்டத்தின்படி காவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியில் செயல்படும். காவிரி ஒழுங்காற்று ஆணையத்தின் அலுவலகம் பெங்களூரில் இருக்கும். இந்த ஆணையத்தில் தலைவர், 9 உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி ஆணையத்தின் தலைவர் மற்றும் 9 உறுப்பினர்களை நியமனம் செய்ய ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
மத்திய நீர் வளத்துறை செயலாளர் யு.பி.சிங் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தற்காலிக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய நிரந்தர தலைவர் நியமிக்கப்படும் வரை அவர் அந்த பொறுப்பை வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான தமிழக பிரதிநியாக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே. பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். தண்ணீர் திறப்பை உறுதி செய்யும் காவிரி ஒழுங்காற்றுக் குழு உறுப்பினராக திருச்சி மண்டல நீர்மேலாண்மை தலைமை பொறியாளர் ஆர். செந்தில்குமார் நியமனம் செய்து தமிழக அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.