கடந்த மே 22, 23 தேதிகளில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தன்னெழுச்சியாக மக்கள் போராட்டம் நடத்திய போது ஏற்பட்ட கலவரம் காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 13 பேர்கள் பலியானார்கள் போராடிய மக்களில் பலர் படுகாயமடைந்தனர் சிலர் உடலுறுப்புகளை இழந்தனர்.
அந்த சம்பவங்களை விசாரிப்பதற்காக தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி வசம் பொறுப்பை ஒப்படைத்தது. ஆனால் உயர்நீதிமன்றம், பதிவான இருநூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளை ஒரே வழக்காகப் பதிவு செய்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என உத்தரவிட ஒரே வழக்காகப் பதிவு செய்த சி.பி.ஐ.யின் சென்னை சிறப்பு புலனாய்வு பிரிவினர் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சி.பி.சி.ஐ.டி.யினர் ஒரு மாதத்திற்கு முன்னரே சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தனர்.
அதன்படி சி.பி.ஐ.யின் புலனாய்வு பிரிவு எஸ்.பி.சரவணன், டி்எஸ்.பி.ரவி, தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள், கடந்த 13ம் தேதி தூத்துக்குடி வந்தவர்கள் அங்கேயே முகாமிட்டு விசாரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த விசாரணை தற்போது வரை தொடர்ந்து நடந்து வருகிறது.
தனக்கான தனித்தன்மையான கோணத்தில் சம்பவத்தின் மூலக்கூறுகளை வெளிக்கொண்டு வர, விசாரணையில் ஈடுபட்டுள்ள சி.பி.ஐ யினர், அதற்காக முன்கூட்டியே ஆஜாராகும்படி அரசு அதிகாரிகளுக்கு மட்டுமே சம்மன் அனுப்பி ஆஜராகச் சொல்லி சம்பவம் காரணமாக அவர்களிடம் விசாரணை செய்திருக்கிறார்கள். தாசில்தார்களான கண்ணன், சந்திரன், சம்பவத்தின் போது பணியிலிருந்த இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன், ஹரிஹரன் உள்ளிட்ட 19 போலீஸ் அதிகாரிகளும் சி.பி.ஐ.யினரால் விசாரிக்கப்பட்டுளனர்.
இவர்களையடுத்து சம்பவத்தில் பலியான ஸ்னோலின், கார்த்திக். சிலோன் காலனியின் கந்தையா உள்ளிட்டோர்களின் வீடுகளுக்கே சென்று விசாரிக்கிறது சி.பி.ஐ.யின் சிறப்பு டீம். விசாரணைகளின் போது சி.பி.ஐ. அதிகாரிகள் வீடியோ பதிவு. போட்டோக்கள் மற்றும் ஆடியோ ரெக்கார்டிங் போன்றவைகளால் பதிவு செய்து கொள்கின்றனர். தவிர, பாதிக்கப்பட்ட குடும்பத்தவர்களிடம் சில கேள்விகளைக் கேட்டும், பதிலை பதிவு செய்கின்றனர்.
மட்டுமல்லாமல், துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது வழியோரங்களில் பணியிலிருந்த டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் ஆயுதப்படை எஸ்.ஐ.க்கள் ஆகியோரிடம், நேரிலேயே சென்று விசாரித்து கேள்விக்கான பதில்களை பதிவு செய்வது வலுவானது என்றும் சொல்லப்படுகிறது. விசாரணையும் தொடர்கிறது.
இதனிடையே ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது போலீஸ் தடியடியில் படுகாயமடைந்து மூன்று மாத சிகிச்சையிலிருந்த ஜஸ்டின் (29) என்பவர் சிறுநீரகம் பாதிக்கப்பட்டதால் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்தவர் பலனின்றி 15 அன்று மரணமடைந்தார். அவர் ஒட்டப்பிடாரம் அருகேயுள்ள கீழமுடிமண்ணைச் சேர்ந்தவர். இதனால் பலி 14 ஆக உயர்ந்துள்ளது.