திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான கொடியேற்றம் அண்ணாமலையார் கோயிலுக்குள் உள்ள தங்ககொடி மரத்தில் சிவாச்சாரியர்களால் டிசம்பர் 1ந்தேதி விடியற்காலை 5.30 மணியளவில் ஏற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மூவாயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் கொடியேற்றும் நிகழ்வை பக்தி பரவசத்தோடு கண்டனர். இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, எஸ்.பி சிபி.சக்கரவர்த்தி கலந்துக்கொண்டனர்.

இன்று காலை முதல் நாள் திருவிழா தொடங்கியது. உற்சவமூர்த்திகள் வீதியுலா வந்தனர். இன்று இரவும் சுவாமிகள் வீதியுலா வந்தன. மாடவீதியை சுற்றி சுவாமி வீதியுலா வருகிறது. சுவாமிகள் வரும் வாகனங்களுக்கு பலத்த போலிஸ் பாதுகாப்பு போட்டுயிருந்தாலும், நெருக்கடியில்லாத போக்குவரத்தை தர முடியாமல் தவிக்கின்றனர் காவல்துறையினர். சரியான திட்டமிடல் இல்லாததே இதற்கு காரணம் என்கின்றனர்.
மாடவீதியிலயே காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட், நகைக்கடைகள், துணிக்கடைகள் என பலவும் உள்ளன. இங்கு மக்கள் வரவேண்டும் என்றால் மாடவீதிக்கு வந்துதான் ஆகவேண்டும். நகரத்தின் வேறு பகுதிகளில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் மாடவீதிக்கு வர பல தெருக்கள், சாலைகள் உள்ளன. சுவாமி வீதியுலா வரும்போது, ஒரு தெருவை சுவாமி வரும் வாகனங்கள் கடந்ததும், அந்த தெருவை திறந்துவிடுவார்கள். வாகன ஓட்டிகள் சுலபமாக தாங்கள் செல்லும் பகுதிக்கு அந்த வழியாக சென்றுவிடுவார்கள்.
இந்தமுறை அப்படியொரு ஏற்பாட்டை காவல்துறை செய்யவில்லை. ஒவ்வொரு சாலை முனையிலும் காவல்துறையினர் இருந்தாலும், வாகன ஓட்டிகளை நிறுத்தவில்லை. சுவாமி செல்லும் பாதையிலேயே அதன் பின்னால் போகும்படி வாகனங்களை அனுப்பினார்கள். இதனால் நகரத்தில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஒருதெருவை கடக்க 1 மணி நேரத்துக்கு மேலாக வாகன ஓட்டிகள் காத்திருந்து வெறுப்புக்கு ஆளானார்கள்.