வேலூர் மாவட்டத்தில் காட்பாடி, கே.வி.குப்பம், வாணியம்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு, நாட்றாம்பள்ளி தாலுக்காவின் பெரும்பாலான கிராமப்புற பகுதிகள் ஆந்திரா மாநில எல்லையோரம் வருகின்றன. இந்தபகுதிகளில் வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, பேரணாம்பட்டு பகுதியில் இருந்து ஆந்திரா மாநில கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலையை தவிர்த்த ஒற்றையடி பாதைகள் வழியாக தமிழகத்தில் இருந்து விலையில்ல ரேஷன் அரிசி கடத்தி சென்று அங்கு விற்பதும், ஆந்திராவில் இருந்து சாராயம் கடத்தி வந்து தமிழகத்தில் விற்பதும் வாடிக்கையாக உள்ளது.
இதனைத்தடுக்க வேண்டும் என பலதரப்பில் இருந்தும் கோரிக்கை, இளைஞர்கள் போராட்டம் நடத்தினாலும் காவல்துறை, உணவு கடத்தல் தடுப்புத்துறை போன்றவற்றில் உள்ள கறுப்பாடுகளால் தடுக்க முடியாமல் தவிக்கின்றனர். அவர்களையும் மீறி நடைபெறும் ரெய்டுகளில் டன் கணக்கில் ரேஷன் அரிசிகள் சிக்கி வருகின்றன.
இந்நிலையில் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தும்பேரி வட்டம் அண்ணா நகர் பகுதியில் பறக்கும்படை தனி வட்டாட்சியர் தலைமையில் வருவாய்த்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ஆந்திரா மாநிலத்திற்கு இருசக்கர வாகங்களில் ரேஷன் அரிசி கடத்தி வந்தனர். அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்ததை கண்டு அரிசி மற்றும் இருசக்கர வாகங்களை விட்டு கடத்தல் காரர்கள் தப்பி ஓட்டம். கடத்தலுக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகங்கள் மற்றும் 450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்படி அடிக்கடி சிக்கினாலும் தற்போது ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஆந்திரா மாபியாக்கள் சாராயம் கொண்டு வந்து தந்துவிட்டு அதற்கு பதில் ரேஷன் அரிசி வாங்கி செல்வதும், வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாராய விற்பனை கும்பல், ஆந்திரா சாராயத்தை வாங்க ரேஷன் அரிசியை விலையாக தருவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதன் முழு விவரத்தை பெற அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் என்கின்றனர்.