நூல் விலையைக் குறைக்க மத்திய அரசு விரைவாக நடவடிக்கை எடுக்கக்கோரி, இடைப்பாடியில் விசைத்தறி நெசவாளர்கள் ஒரு வார காலத்திற்கு வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால் 20 ஆயிரம் விசைத்தறிக் கூடங்கள் முடங்கியுள்ளன.
சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை விவசாயத்திற்கு அடுத்தபடியாக நெசவுத்தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள் உள்ளன. இத்தொழிலை நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் சார்ந்துள்ளனர். இளம்பிள்ளை, கொண்டலாம்பட்டி, மகுடஞ்சாவடி ஆகிய பகுதிகளில் சேலை உற்பத்தி அதிகளவில் நடந்து வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் சேலைகளுக்கு சேலம் பட்டு, இளம்பிள்ளை பட்டு என்ற தனிச்சிறப்புகளும் உண்டு.
இடைப்பாடி சுற்று வட்டாரங்களில் துண்டு உற்பத்தி பிரதானமாக உள்ளது. இப்பகுதியில் நெய்யப்படும் துண்டுகள், தமிழகச் சந்தைகள் மட்டுமின்றி மஹாராஷ்டிரா, தெலங்கானா, குஜராத் மாநிலங்களில் உள்ள ஜவுளி சந்தைகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அண்மைக் காலமாக நெசவுத்தொழிலுக்குத் தேவையான நூல் விலை கடுமையாக உயர்ந்ததால் விசைத்தறித் தொழிலை பெரிய அளவில் பாதித்துள்ளது.
நூல் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து இருந்தும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாததால், பல பகுதிகளில் ஜவுளி உற்பத்தி அடியோடு முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், பள்ளிபாளையம், வெண்ணந்தூர், ராசிபுரம் பகுதிகளில் ஏற்கனவே நூல் விலையேற்றத்தைக் கண்டித்து நெசவாளர்கள், அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினர்.
இந்த நிலையில் இடைப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விசைத்தறி நெசவாளர்கள் வியாழக்கிழமை (மே 12) முதல் ஒரு வார காலத்திற்கு விசைத்தறிக் கூடங்களில் உற்பத்தியை நிறுத்தி வைத்து, போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர்.
இது தொடர்பாக இடைப்பாடி ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறியது: விசைத்தறியில் பயன்படுத்தப்படும் 10, 20, 40ம் எண் நூல்களின் விலை கடந்த 6 மாதத்திற்கு முன்பு இருந்ததை விட தற்போது 75 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் உற்பத்தி விலைக்குக் கூட துண்டுகளை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விலையேற்றத்தைக் குறைக்க வேண்டும் என அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தும் எந்த பலனும் இல்லை. ஆகையால், நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி மே 12 முதல் 18ம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு உற்பத்தியை நிறுத்தி, கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
எங்கள் போராட்டத்திற்கும் சேலம் மட்டுமின்றி அண்டை மாவட்டத்தில் உள்ள நெசவாளர்கள், மொத்த வாடிக்கையாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மே 16ம் தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்திருக்கிறோம். இடைப்பாடி சுற்று வட்டாரத்தில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள் இயங்கி வருகின்றன. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் 50 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு, உடனடியாக நூல் விலையைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அதற்கு தமிழக அரசும் அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறினர்.