மும்பையை தலைமையிடமாக கொண்ட சீமா டிரேடர்ஸ் என்ற நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பேரீச்சம்பழங்களை பதப்படுத்தி விற்பனை செய்து வருகின்றனர். கிமியா டேட்ஸ் பேரீச்சம்பழத்தின் தமிழக விற்பனை பிரதிநிதியாக மகாராஸ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஜாவேத்ரஷா என்பவர் உள்ளார். இந்த நிலையில் திருச்சி தஞ்சைரோட்டில் உள்ள திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாலப்பேட்டையில் உள்ள நேசம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் ஆன்லைனில் கிமியா டேட்ஸ் பேரீச்சம்பழத்தை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக விளம்பரம் செய்துள்ளது.
இந்த விளம்பரத்தை பார்த்த ஜாவேத்ரஷா நம்முடைய பேரீச்சம்பழங்களை நம்முடைய விலையை விட குறைவாக எப்படி இவர்களால் விற்பனை செய்ய முடியும் என்று சந்தேகம் அடைந்து நேரடியாக திருச்சிக்கு வந்து திருவெறும்பூர் டி.எஸ்.பி சேகரிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்த துவாக்குடி காவல் ஆய்வாளர் அழகம்மாளிடம் உத்தரவிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் அழகம்மாள் ஆலோசனைப்படி ஜாவேத்ரஷா தஞ்சையிலிருந்து பேசுவதாகவும், தனக்கு கிமியாடேட்ஸ் பேரீச்சம்பழம் 50 பாக்ஸ் வேண்டும் என்று ஆர்டர் கொடுத்துள்ளார். எங்கு வந்து வாங்கிக்கொள்வது என்று கேட்டவுடன் துவாக்குடி அருகே உள்ள குடோனில் இருப்பதாக சொல்லி வர சொல்லியிருக்கிறது அந்த கும்பல். அங்கே சென்று பார்த்த ஜாவேத்ரஷா கிமியா டேட்ஸ் பேரீச்சம்பழம் போலியாக தயாரிக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து அவர் உடனே காவல் ஆய்வாளர் அழகம்மாளுக்கு தகவல் சொல்லியிருக்கிறார்.
ஏற்கனவே தயாராக இருந்த காவல் ஆய்வாளர் உடனே தன்னுடைய போலிஸ் படையுடன் குடோனுக்கு சென்றபோது நேசம் எண்டர்பிரைசஸ் ஆம்னி வேனில் டிரைவர் இர்பான் போலி கிமியா டேட்ஸ் பேரீச்சம்பழ பெட்டிகளை ஏற்றிக்கொண்டிருந்திருக்கிறார். அவரை மடக்கிபிடித்து போலிஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்ததில். இர்பானின் சொந்த ஊர் காரைக்குடி என்றும் தன் தாயும் பத்தாலபேட்டையில் வாடகை வீட்டில் வசிப்பதாகவும் சொல்லி தொடர்ந்து கொடுத்த வாக்குமூலத்தில் திருச்சி ரோட்டில் உள்ள பாபு டிரேடர்ஸ் மற்றும் காந்திமார்கெட் மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள பேரீச்சம் பழங்களை வாங்கி டெலிவரி செய்வதாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இவருடைய பின்னணியில் உள்ள அப்பு டிரேடர்ஸ் நிர்வாகி முத்துகுமார், மற்றும் அக்ஷியா பேக்கரி நிர்வாகி கருப்பையா மற்றும் இர்பான், இவர்களோடு 380 பாக்ஸ் போலி பேரீச்சம் பழங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.