புதுக்கோட்டையில் கணினி தமிழ்ச்சங்கம் சாப்பில் நடைபெற்ற இணையப் பயிற்சி முகாமில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா கலந்து கொண்டு பேசும்போது.. கேமரா வெளிச்சத்தைத் தாண்டி உண்மையிலேயே குப்பைகள் குவிந்துகிடக்கும் பகுதிகளுக்கு மோடி வரத்தயாரா எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், இன்றைக்கு சமூக ஊடகங்களை பல்வேறு தரப்பினர் பல்வேறு செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி 32 லட்சம் பேரை இத்துறையில் இறக்கி விட்டுள்ளது. இதர அரசியல் கட்சிகளும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றன. என்றாலும் அன்றாடம் நாட்டில் எந்தப் பொருள் குறித்து விவாதிக்க வேண்டுமென இவர்கள்தான் தீர்மானிக்கின்றனர். அந்த அளவுக்கு ட்ரெண்டை உருவாக்குகிறார்கள். நாட்டிலுள்ள 130 கோடி மக்களின் மனநிலையை இவர்கள்தான் தகவமைக்கிறார்கள்.
பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் சந்திப்பைவிட மோடி குப்பை பொருக்கிய செய்திதான் பிரதானமாகப் பேசப்படுகிறது. அவ்வளவு சுத்தமான குப்பைகள் வேறு எங்கும் கிடைக்காது என்கிற அவரின் குப்பை சேகரிக்கும் பணி இருந்தது. கேமரா வெளிச்சத்தைத் தாண்டி உண்மையிலேயே குப்பைகள் குவிந்து கிடக்கும் பகுதிக்கு அவர் வரத்தயாரா?
நாட்டில் வருடத்திற்கு 22 ஆயிரம் பேர் மலக்குழியில் இறக்கின்றனர். வருடத்திற்கு 65 ஆயிரம் டன் குப்பைகளை நாம் உருவாக்குகிறோம். பல லட்சம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நம்மால் ராக்கெட் அனுப்ப முடிகிறது. ஒருசில அடி ஆழத்தில் இருக்கும் மலத்தை அப்புறப்படுத்துவதற்கு நம்மால் எந்திரம் கண்டுபிடிக்க முடியவில்லை.
அன்லிமிட்டெட் வாய்ஸ், அன்லிமிட்டெட் டேட்டா மூலம் எந்த நேரமும் செல்போனிலேயே இளைஞர்கள் மூழ்கிக்கிடக்கின்றனர். இது மனிதர் தங்கள் அருகாமையில் இருக்கும் உயிப்பான மனிதர்களோடு உறவாடுவது தடைப்பட்டு இருக்கிறது. ஒருசில நிமிடங்கள் டவர் இல்லையென்றால் உலகமே இருண்டுவிட்டதாக கவலைப்படுகிறோம். நமது சொந்த நாட்டுக்குள்ளே காஷ்மீர் மக்கள் கடந்த இரண்டு மாதங்களாக தொலைத் தொடர்பு உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இருந்து முழுவதுமாகத் துண்டிக்கப்பட்டு இருகிக்கின்றனர். இதுகுறித்து நாம் கவலைப்பட்டு இருக்கிறோமா? விவாதித்து இருக்கிறோமா. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து இருக்கிறோமா?
நாட்டில் 58 சதவிகிதம் பேர் ஏதாவது ஒருவகையில் இணையத்தைப் பயன்படுத்துகின்றான். இது மேலும் ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும். இணைத்தை ஆக்கப்பூர்வமான வகையில் பயன்படுத்துவதற்கும், முன்னெடுத்துச் செல்வதற்கும் நாம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ஆதவன் தீட்சண்யா பேசினார்.
மேலும் பிரதமர் மோடி அடிக்கடி சொல்லி வரும் தூய்மை இந்திய திட்டத்தை திறம்பட செயல்படுத்தி வந்த புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தாலுகா, மங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளியில் ம் வகுப்பு படித்த மாணவன் ஸ்டீபன்ராஜ் (வயது 14). வானாலியில் மோடியின் தூய்மை இந்தியா பேச்சைக் கேட்டு பள்ளியை மட்டுமல்ல அவன் செல்லும் தெருக்களைக் கூட எந்த இடத்தில் குப்பை கிடந்தாலும் எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு செல்லும் நல்ல செயலை செய்து வந்தான். பள்ளியும், கிராமமும் அந்த மாணவனை பாராட்டாத நாள் இல்லை. ஆனால் அவன் கடந்த வாரம் குளத்து நீரில் சிக்கி பாிதாபமாக உயிரிழந்துவிட்டான்.
உங்கள் திட்டத்தை அழகாக செய்த அந்த மாணவன் குடும்பத்திற்கு உங்கள் மத்திய அரசு செய்தது என்ன? ஏன் அந்த குடும்பத்திற்கு உதவிகள் செய்யக் கூடாது என்ற கேள்வியையும் எழுப்பினார்.