கரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட 19 மருத்துவ நிபுணர்களுடன் காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் பழனிசாமி ஆலோசனை செய்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ரகுநந்தன் உள்ளிட்ட மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், துறை சார்ந்த உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
முதல்வர் பழனிசாமியுடனான ஆலோசனைக்குப் பின்னர் மருத்துவ நிபுணர்கள் சார்பில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மருத்துவ நிபுணர் பிரதீபா, "தமிழகத்தில் அரசு எடுக்கும் கரோனா தடுப்பு நடவடிக்கை சிறப்பாக இருக்கிறது. இரண்டு மணி நேரம் முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினோம். தமிழகத்தில் ஏப்ரல் 14- ஆம் தேதிக்கு பின்பும் ஊரடங்கை இரண்டு வாரங்கள் நீட்டிக்க, கரோனா பரவலைத் தடுக்க அமைக்கப்பட்ட 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் குழு முதல்வருக்குப் பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்தில் அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும் கரோனா தாக்கம் அதிகரித்து தான் வருகிறது." இவ்வாறு மருத்துவ நிபுணர் பேசினார்.