![police](http://image.nakkheeran.in/cdn/farfuture/wak-jQ8rWk-9RoyWIQ4jja0xg14wzkqLj_RElz0t2jY/1597945222/sites/default/files/inline-images/police%20600_14.jpg)
விழுப்புரத்தில் மூன்று தினங்களுக்கு முன்பு ஆயுதப்படை காவலர் ஏழுமலை என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் இதுகுறித்து பத்திரிகைகளிடம் கூறும்போது, தற்கொலை செய்துகொண்ட ஏழுமலைக்கு பணிச்சுமை ஏதும் கிடையாது. அவரது பெற்றோரும் இதனைத் தெரிவித்துள்ளனர்.
“நான் பொறுப்பேற்ற நாளிலிருந்து காவல்துறையினருக்கு ஏதாவது பிரச்சனை அல்லது பணிச்சுமை, மனஅழுத்தம் இருந்தால் என்னை உடனடியாக எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து என்னிடம் மனந்திறந்து தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளேன். எனவே காவல்துறையினர் எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொண்டு தங்கள் பிரச்சனைகளை கூறினால் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணப்படும்.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அரசு உத்தரவுகளை மட்டுமே அரசியல் கட்சியினர், பொதுமக்கள், இந்து அமைப்பினர் கடைப்பிடிக்க வேண்டும். அதை மீறுபவர்கள் மீது காவல்துறை பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும். பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கவும், ஊர்வலமாக எடுத்து செல்லவும் கூடாது. வீடுகளில் மட்டும் சிலை வைத்து வழிபாடு செய்ய வேண்டும், அதற்கு தடையில்லை” என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.