ஜெ.மறைவுக்கு பிறகு அதிமுகவில் ஏறபட்ட பிளவு இன்னும் ஒட்டவே இல்லை. சசிகலா உறவுகளை அகற்ற வேண்டும் என்று ஒபிஎஸ் போர்க்கொடியுடன் தர்மயுத்தம் நடத்தினார். பிளவு அதிகமாவதைப் பார்த்து ஒபிஎஸ் நிபந்தனையை எடப்பாடி ஏற்றதாக கூறி துணை முதல்வர் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியும் வாங்கிக் கொண்டு ஒபிஎஸ் இணைந்தார்.
ஒ.பி.எஸ் இணைந்தாலும் அவரை நம்பி அதிமுகவில் இணைந்தவர்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிமுக நிர்வாகிகள் ஒதுக்கியே வைத்துள்ளனர். ஒபிஎஸ் அணிக்கு கட்சி பதவிகளும் இல்லை. ஆனால் தன்னை நம்பி வந்த தொண்டர்களைவிட தன் குடும்ப நலனில் அக்கறை செலுத்தினார் ஒபிஎஸ். அதனால் தான் ஒபிஎஸ் அணியினருக்கு கிடைத்த பதவியை கூட ஒரே நாளில் பறித்துக் கொண்டார்கள். அதை ஒபிஎஸ் கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில் தான் 17 வது மக்களவை தேர்தலும், சட்டமன்ற இடைத் தேர்தலும் வந்தது.
புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி பறிக்கப்பட்டதால் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளும் திருச்சி, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 4 நாடாளுமன்றத் தொகுதியில் இணைக்கப்பட்டது. நடந்து முடிந்த தேர்தலில் அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பு ஒபிஎஸ் அணியை சேர்ந்த மாஜிக்களான கார்த்திக் தொண்டைமான் மற்றும் ராஜசேகர் குரூப்பை தேர்தல்பணிக்கு அழைக்கவில்லை. அதனால் புறக்கணிகப்படுவதை அறிந்த மாஜிக்கள் ஒபிஎஸ் மகன் போட்டியிட்ட தேனி தொகுதியில் முகாமிட்டு தேர்தல்பணியில் ஈடுபட்டனர்.
தேர்தல் முடிவுகள் வெளியான போது அமைச்சர் தரப்பு அப்செட் ஆனது. மாஜிக்கள் தரப்பு ஆனந்தமடைந்தது. காரணம் அமைச்சர் தேர்தல் பணி செய்த தொகுதிகளில் அதிமுக கூட்டணி படுதோல்வி அடைந்ததுடன் சொந்த தொகுதியான விராலிமயைிலேயே காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு வாக்குகள் அதிகம் மாவட்டம் முழுவதும் அதே நிலை தான். ஆனால் நாங்கள் வேலை செய்த தேனியில் வேட்பாளரை வெற்றி பெறச் செய்துவிட்டோம் என்பது தான்.
இந்த நிலையில் தான் அமைச்சருக்கு எதிராக போட்டி அதிமுகவினரான ஒபிஎஸ் ஆதரவாளர்களான கார்த்திக் தொண்டைமானும் ராஜசேகரும் 19 தனியார் நிறுவனங்களை அழைத்து வேலைவாய்ப்பு முகாம் நடத்தினார்கள். இதில் பல மாவட்டங்களில் இருந்து 2700 இளைஞர்கள் கலந்து கொண்டர். மாலை 1800 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இதேபோல ஒவ்வொரு மாதமும் முகாம் நடத்த தி்டமிட்டுள்ளதாக கூறினார்கள். அதிமுகவுக்கு எதிராக போட்டி அதிமுகவினர் நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெற்றவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இவர்களின் போட்டியால் 1800 பேருக்கு வேலை கிடைத்திருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியே.