பிரதமர் மோடி குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலோவில் பூட்டோ பேசியது சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், தமிழகத்திலும் புதுச்சேரியிலும் பாஜகவினர் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தமிழகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிறகு பாஜகவைச் சேர்ந்த கரு.நாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''இந்தியா முழுவதும் 1971 டிசம்பர் 16 ஆம் தேதி நாம் பெற்ற வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தோம். 93 ஆயிரம் பாகிஸ்தான் ராணுவ வீரர்களை மண்டியிடச் செய்து அவர்கள் கேட்ட மன்னிப்புக்கு பெருந்தன்மையாக மன்னிப்பு கொடுத்தோம். அந்த வெற்றி தினத்தைக் கொண்டாடுகின்ற நாள் நேற்று. இந்தியா முழுவதும் வெற்றி தினத்தைக் கொண்டாடி அந்தப் போரிலே வீர மரணம் அடைந்த நமது ராணுவ வீரர்களுக்கெல்லாம் அஞ்சலி செலுத்துகின்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்த தினத்தில் ஐ.நா சபையில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவில் பூட்டோ ஐநா சபைக்குள் அதைப் பேசவில்லை. அங்கு பேசுவதற்கு அவருக்குத் தைரியம் இல்லை. ஐ.நா சபையில் பேசி முடித்துவிட்டு வெளியே வந்த பிறகு நமது பாரத பிரதமரை அவதூறாகப் பேசியுள்ளார். இதனைக் கண்டித்து இந்தியா முழுவதும் இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னையிலும் நடைபெற்றிருக்கிறது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகளில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உலகில் மிக மோசமான நாடு என்று அடையாளம் காட்டப்பட்டு இருக்கின்ற நாடு பாகிஸ்தான்.
அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தைத் தகர்த்தவர்கள்; பிரான்சில் தாக்குதல் நடத்தியவர்கள்; அஜ்மல் கசாப்-ஐ இந்தியாவிற்கு அனுப்பி பல நூறு பேரை மும்பையில் கொன்று குவித்தவர்கள்; இந்திய நாடாளுமன்றத்திற்குள் புகுந்து சுட்டுக் கொன்றவர்களின் அமைப்புகளுக்கு எல்லாம் அடைக்கலம் தந்து அவர்களை வளர்த்து விடுகின்ற ஒரு மோசமான பயங்கரவாத நாடு பாகிஸ்தான் என்பதை உலகமே அறியும். அந்த பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு வெளியுறவுத்துறை அமைச்சர் உலகின் தலைசிறந்த ஜனநாயக நாடு; உலகத்திற்கே வழிகாட்டிக் கொண்டிருக்கின்ற நாடு; உலகின் எந்த முடிவுகளை எந்த நாடுகள் எடுத்தாலும் இந்தியாவைக் கேட்டு எடுக்க வேண்டும் என்ற ஒரு அற்புதமான சூழ்நிலையை தந்து கொண்டிருக்கின்ற பிரதமர் மோடியைப் பார்த்து அவர் சொன்ன அந்த வார்த்தைகள் ஒவ்வொரு இந்தியனுக்கும் வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. இதை எல்லோரும் கண்டிக்க வேண்டும். இந்த நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு குடிமகனும் அவரது மோசமான பேச்சைக் கண்டிக்க வேண்டும்'' என்றார்.