ஹாங்காங்கில் கின்னஸ் சாதனை படைத்த பிரபல யோகா பயிற்சியாளர் யோகராஜ், பாலியல் புகாரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். யோகராஜ் மீதான குற்றச்சாட்டுகள் என்ன என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.
தடகள பயிற்சியாளர் நாகராஜ், கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ் வரிசையில் அடுத்ததாக பாலியல் புகாரில் சிக்கியுள்ளார் யோகராஜ். தற்போது சென்னை கோடம்பாக்கத்தில் வசித்துவரும் இவர், கடந்த 2015ஆம் ஆண்டு ஹாங்காங்கில் நடந்த நிகழ்வில் தொடர்ந்து 40 மணி நேரம் யோகா செய்து கின்னஸ் சாதனை படைத்தார். இதுவே இவர் பிரபலமடைய காரணம். யோகா கலையைக் கற்போரிடையே பிரபலமாக உள்ள இவர் மீது சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரிடம் யோகா பயிற்சியைப் பயில சென்றபோது காதலிப்பதாகக் கூறிப் பழகத் தொடங்கிய யோகராஜ், பின் நாட்களில் தொல்லை கொடுக்கத் தொடங்கியதாக அந்தப் பெண் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அதற்கான ஆடியோவையும் அந்தப் பெண் வெளியிட்டுள்ளார்.
'பார்ட்னர் யோகா' என்னும் முறையைக் கற்றுக்கொடுப்பதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்தப் பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார். சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறி வீட்டிற்கு அழைத்து, குளிர்பானத்தில் மயக்க மருந்தைக் கலந்துகொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதனை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டுவதாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் அந்தப் பெண்.
இது தொடர்பான புகாரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அந்தப் பெண் அளித்த வாட்ஸ் ஆப் தகவல்கள், குரல் பதிவுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததோடு, குற்றச்சாட்டுக்கு ஆளான யோகராஜையும் அழைத்து விசாரணை செய்தனர். அதைத் தொடர்ந்து, அவர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அவரை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.