கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அருகே வீராணம் ஏரியில் உள்ள இராதா மதகு பகுதியில் வீராணம் ஏரியை புராதான சின்னமாக தேர்வு செய்தமை குறித்து பொதுமக்கள் அறிந்திடும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ், தலைமையில் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வீராணம் ஏரியின் தொன்மை மற்றும் பயன்கள் குறித்து பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், வீராணம் ஏரியை புராதான சின்னமாக தேர்வு செய்தது குறித்து பொதுமக்கள் அறிந்திடும் வகையில் பள்ளி மாணவ, மாணவியர்களைக் கொண்டு, நீரின் அவசியத்தை உணர்த்தும் வகையில், வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.
இதுபோல் கொள்ளிடம் வடிநில கோட்டம் கட்டுப்பாட்டில் உள்ள புராதான சின்னமாக அறிவிக்கப்பட்ட கீழணையிலும், நீர்வளத்துறை பொறியாளர்கள், அனைத்துத் துறை அலுவலர்கள், பொதுமக்கள், விவசாயிகள், விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் பங்கேற்புடன் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சிதம்பரம் சார் ஆட்சியர் சுவேதா சுமன், கொள்ளிடம் வடிநில கோட்ட செயற்பொறியாளர் காந்தரூபன், மாவட்ட சுற்றுலா அலுவலர்(பொ.) முத்துசாமி, சிதம்பரம் நீர்வளத்துறை அலுவலர்கள், வருவாய்த்துறை மற்றும் அனைத்து துறை அலுவலர்களுடன், வீராணம் ஏரி ராதா வாய்க்கால் பாசன சங்க தலைவர் ரங்கநாயகி, விவசாய சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பெருவாரியான பொதுமக்கள் மற்றும் உள்ளூர் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
மத்திய அரசின் மூலம் சர்வதேச பாசனம் மற்றும் வடிகால் ஆணையம் மூலம் ஜல்சக்தி அபியான் திட்டத்தில் இந்தியாவில் உள்ள பழமையான நீர்த்தேக்கங்களில் பொதுமக்களுக்கு மிக மிக அவசியமான பயன் தரக்கூடிய 75 நீர்த்தேக்கங்ளை புராதான சின்னமாக தேர்வு செய்து புராதான சின்னத்திற்கான தேர்வு சான்றிதழை கடந்தாண்டு வழங்கியுள்ளது.
இந்த ஏரி தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஏரியாகும். இது 10-ஆம் நூற்றாண்டில் சோழ மன்னன் பராந்தக சோழன் ஆட்சியின் போது உருவாக்கப்பட்டது. சோழ மன்னன் முதலாம் பராந்தக சோழனின் மகனான இளவரசர் இராஜாதித்திய சோழன் தன் வீரர்களுடன் தக்கோலத்தில் (தற்போதைய காட்டுமன்னார் கோயிலில்) முகாமிட்டிருந்தபோது அவரது வீரர்களை பயன்படுத்தி வீராணம் ஏரி உருவாக்கப்பட்டது.
இளவரசர் இராஜாதித்திய சோழனால் புதிய ஏரி உருவாக்கப்பட்டவுடன், அவரது தந்தையான பராந்தகசோழன் பெயரில் இந்த ஏரி வீரநாராயணன் ஏரி என்று அழைக்கப்பட்டது. நாளடைவில இது மருவி வீராணம் ஏரி என்று வழக்கத்தில் உள்ளது. ஏரியின் பிரதானக்கரையின் நீளம் 16.00 கி.மீ. எதிர் வாய்க்கரையின் நீளம் 30.65 கி.மீ ஆகும். ஏரியின் பிரதானக்கரையில் 28 பாசன மதகுகளும், எதிர் வாய்க்கரையில் 6 பாசன மதகுகளும் உள்ளன. இந்த ஏரிக்கு கொள்ளிடம் ஆற்றின் கீழணையிலிருந்து அமைக்கப்பட்டுள்ள சுமார் 22 கி.மீட்டர் நீளமுள்ள வடவாறு கால்வாய் வழியாக நீர் கொணரப்பட்டு ஏரியில் நிரப்பப்பட்டு வருகிறது. எரியின் முழுநீர் மட்டம் 47.500 அடி, கொள்ளளவு 1465 மில்லியன் கனஅடி, ஏரியின் நீர் பிடிப்பு பரப்பு 15 சதுரமைல் ஆகும்.
இந்த ஏரியின் பாசன பரப்பளவான 44,856 ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன வசதி தருகிறது. பாசனவசதி மட்டுமல்லாமல் ஏரியிலிருந்து நாளொன்றுக்கு சுமார் வினாடிக்கு 72 கனஅடி வீதம் சென்னை குடிநீருக்காக அனுப்பப்பட்டு வருகிறது. சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் பிரதான ஏரியாக வீராணம் ஏரி விளங்குகிறது. சென்னை குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு புதிய வீராணம் திட்டம் செயல்படுத்தப்பட்டு ஏரியின் நீர் மட்டம் 45.50 அடி கொள்ளளவு 930 மில்லியன் கன அடியாகவும் இருந்ததை 47.50 அடி கொள்ளளவு 1,465 மில்லியன் கன அடியாகவும் உயர்த்தப்பட்டது. மேலும், எதிர்வாய்க்கரை 8.கி.மீ இருந்ததை 30.65 கி.மீ ஆக நீட்டிக்கப்பட்டது.
வெள்ளக்காலங்களில் அரியலூர் மாவட்டத்திலிருந்து வரும் வெள்ள நீரானது செங்கால் ஓடை, பாளையங்கோட்டை வடிகால், ஆண்டிபாளையம் வடிகால், பாப்பாக்குடி வடிகால், சுருணாகர நல்லூர் வடிகால் மற்றும் கருவாட்டு ஓடை வழியாக சுமார் 18,000 கன அடி நீர், வீராணம் ஏரிக்கு வந்தடைகிறது. இந்த நீரானது லால்பேட்டையில் உள்ள மூன்று கலுங்குகள் வழியாக வெள்ளியங்கால் ஓடை மூலமும், வீராணம் புதுமதகு வழியாக வெள்ளாற்றிலும் வெளியேற்ற ஏதுவாக உள்ளது.
இந்த ஏரியிலிருந்து உபரிநீர் வெள்ளாற்றில் உள்ள சேத்தியாதோப்பு அணைக்கட்டுக்கும், வாலாஜா ஏரி மற்றும் பெருமாள் ஏரி இணைப்பு கால்வாய்கள் மூலம் திறந்துவிடப்பட்டு அதன் மூலம் கூடுதலாக 40,669 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
வெள்ளாற்றில் தண்ணீர் இல்லாத போதெல்லாம் இந்த ஏரியிலிருந்து வரும் நீரை மேற்கண்ட கால்வாய் அமைப்புகள் மூலம் திருப்பி வெள்ளாற்றில் தேக்கி வைத்து வெள்ளாற்றின் ஆயக்கட்டுக்கும் பாசனம் செய்யப்படுகிறது. ஏரியின் அமைப்பு 1000 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த கட்டமைப்பு சேதமும் இல்லாமல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி பெருமை வாய்ந்த வீராணம் ஏரியை சுற்றுலா தலமாக்கவேண்டும், ஏரியை உருவாக்கிய ராஜாதித்திய சோழன் சிலை அமைக்க வேண்டும் என பல ஆண்டு காலமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த கோரிக்கையை தற்போதைய காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், மற்றும் முன்னாள் இதே தொகுதி எம்எல்ஏவும், தற்போதைய விழுப்புரம் தொகுதி எம்பியுமான ரவிக்குமார் வலியுறுத்தி சட்டமன்றத்தில் பேசியுள்ளார்.
இதுகுறித்து சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ கூறுகையில், “வீராணம் ஏரியை மொத்தமாக மதிப்பீடு செய்து பெரும் திட்டத்தை உருவாக்க வேண்டும். வரலாற்று சின்னமாக உள்ள இந்த ஏரியை இளம் தலைமுறையினருக்கு, இதன் வரலாறு தெரியும் வகையில் சுற்றுலா தலமாக அமைக்க வேண்டும்.
வீராணம் ஏரியை பார்க்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவ மாணவிகள் தினம் தோறும் கல்வி சுற்றுலாவுக்கு வருகிறார்கள். ஏரியில் எந்த வசதியும் இல்லாததால் வாகனத்தில் சென்றவாறு பார்த்து செல்கிறார்கள்.
எனவே அரசு பொழுதுபோக்கு அம்சங்களுடன் சுற்றுலா பூங்கா உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய சுற்றுலா தலம் அமைக்க வேண்டும். இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளேன். அவரும் நேரில் வந்து ஏரியைப் பார்க்கிறேன்” என்றார்.