மத்திய அரசின் ஜெல் ஜீவன் திட்டத்தின் மூலம் தமிழகத்தின் குடிநீர் பற்றாக்குறையை போக்க 6000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு குறிப்பிட்டுள்ளார்.
விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் மற்றும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. கூட்டம் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நேரு, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்துக்காக நடப்பு ஆண்டில் 1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசின் ஜெல் ஜீவன் திட்டத்தின் மூலம் தமிழகத்தின் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க 6000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.