
சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மருத்துவ மாணவ மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோர் மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படும் கல்வி கட்டணத்தையே ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வசூலிக்க வலியுறுத்தி கடந்த 11 நாட்களாக தொடர்ந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் நேற்றிலிருந்து மருத்துவ மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று கையில் தட்டு ஏந்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் தமிழக அரசுக்கு அவர்களின் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது மருத்துவம் இரண்டாம் ஆண்டு படிக்கும் தர்ஷினி என்ற மருத்துவ மாணவி மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அருகில் இருந்த மாணவிகள் அவரை மீட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனால் இந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.