நடிகர் ரஜினிகாந்த், பாஜகவின் பினாமி போல செயல்பட்டு வருவதாக சிஐடியு மாநிலத் தலைவர் சவுந்திரராஜன் சேலத்தில் இன்று கூறினார்.
சிஐடியு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சேலத்தில் இன்று (மே 31, 2018) நடந்தது. அதில் பங்கேற்க வந்த சிஐடியு மாநிலத் தலைவர் சவுந்திரராஜன், முன்னதாக செய்தியாளர்களிடம் கூறியது: ’’மக்களை பாதிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. அதேநேரம், அந்த ஆலைக்கு பதிலாக மக்களை பாதிக்காத வகையில் அந்த இடத்தில் வேறு ஒரு தொழிற்சாலை அமைத்து அங்குள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டியது அரசின் கடமை.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ள கருத்து, அரைவேக்காட்டுத்தனமானது. சமூக விரோதிகள் புகுந்து விட்டார்கள் என்று அவர் யாரை குறிப்பிட்டுச் சொன்னார் என்று தெரிவிக்க வேண்டும். காவல்துறையினரையா? அல்லது உளவுத்துறையினரையா? இதில் யார் சமூக விரோதி என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.
காவல்துறைக்கு ஆதரவாகவே பேசி வரும் அவர், பாஜகவின் பினாமி போலவே செயல்பட்டு வருகிறார். அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது குறித்து அவர் வாய் திறக்காதது ஏன்?. அவருடைய கருத்துகளை மக்கள் கொஞ்சமும் ஏற்க மாட்டார்கள். காவல்துறையினர் எழுதிக் கொடுத்ததை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் பேசினார். முதல்வர் பேசியதையே ரஜினியும் மீண்டும் பேசியிருக்கிறார்.
ஜனநாயகத்தின் குரல்வளை நசுக்கப்படும்போது, அதை எதிர்த்து பல வடிவங்களில் போராட்டம் நடத்தப்படலாம். அதன் ஒரு வடிவம்தான், திமுக நடத்தும் மாதிரி சட்டப்பேரவைக் கூட்டம்.
சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கும் முடிவை அரசு உடனடியாக கைவிட வேண்டும். ஜிண்டால், அதானி போன்ற பெரும் நிறுவனங்களுக்காக கொண்டு வரப்படவுள்ள பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய செய்ய வேண்டும்.
மேட்டூர் கெம்ப்பிளாஸ்ட் தொழிற்சாலை அருகே மேலும் ஒரு தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதனால் மக்களுக்கு மேலும் தீங்கு ஏற்படும் என்பதால், அந்த ஆலையை துவக்கக் கூடாது. ஆலை தொடங்கும் நடவடிக்கைகளை எதிர்த்து சிஐடியு போராடும்.’’