ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த குப்பிடிச்சாத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்(30). இவருக்குத் திருமணமாகி மனைவி உள்ளார். சதீஷ்குமார் சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அதே நிறுவனத்தில் சென்னை பெருங்குடியைச் சேர்ந்த சத்தியவாணி 36, என்பவர் வேலை செய்கிறார். அவரது கணவர் இறந்துவிட்டார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
சதிஷ்குமார், சத்தியவாணி இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். ஒரே இடத்தில் வேலை செய்த நட்பு இருவருக்கு இடையே திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. சதீஷ்குமாருக்கு திருமணம் ஆவதற்கு முன்பிலிருந்தே சத்தியவாணியுடன் தொடர்பு இருந்துள்ளது. இருவரும் ஒன்றாகப் பழகிய காலத்தில் தனது பெற்றோரிடம் சொல்லி உன்னைத் திருமணம் செய்துகொள்கிறேன் என்று சதிஷ்குமார் சத்தியவாணிக்கு ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய சத்தியவாணியும் அவருடன் நெருங்கிப் பழகி வந்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்பு வயதில் மூத்த, ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று தனது பெற்றோர்கள் கூறியதால் சத்தியவாணியை விட்டுவிட்டு வீட்டில் பார்த்த பெண்ணை சதிஷ்குமார் திருமணம் செய்துகொண்டுள்ளார். இதையடுத்து சத்தியவாணி வீட்டிற்குச் செல்வதை சதீஷ்குமார் குறைத்து வந்துள்ளார். இதனிடையே சதிஷ்குமாருக்குத் திருமணமாகியும், தன்னை இரண்டாவது திருமணம் செய்துகொள்ளுமாறு சத்தியவாணி வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் திருமணத்தை மீறிய உறவைக் கைவிட முடிவு செய்த சதிஷ்குமார் சத்தியவாணியிடம் பேசுவதையே தவிர்த்துவந்துள்ளார்.
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பிய சதிஷ்குமார் மீண்டும் சென்னைக்கு வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த மனைவி மற்றும் பெற்றோர் ஏன் சென்னைக்கு வேலைக்குச் செல்லவில்லை என்று கேட்டுள்ளனர். அதற்கு விடுமுறையில் வந்துள்ளதாகத் தெரிவித்திருக்கிறார். இதனிடையே சத்தியவாணியிடம் இருந்து தொடர்ந்து செல்போன் அழைப்புகள் வந்த போதும் சதிஷ்குமார் அதனை எடுக்காமல் புறக்கணித்துவிட்டார்.
இந்த நிலையில் சதிஷ்குமார் வீட்டிற்கு வந்த மர்ம கும்பல் ஒன்று சதிஷ்குமார் எங்கே நாங்கள் அவரது நண்பர்கள் என்று கூறியுள்ளனர். சதிஷ்குமாரின் அண்ணன் ரஞ்சித் குமார் தம்பி வீட்டில் இல்லை வெளியே சென்றிருக்கிறார் என்று கூறியுள்ளார். பின்பு உங்களின் தம்பி குறித்துப் பேச வேண்டும் என்று கூறி மர்ம கும்பல் வெளியே வந்த ரஞ்சித் குமாரை காரில் வலுக்கட்டாயமாக ஏற்றி சென்னைக்குக் கடத்தி சென்றது. அக்கம்பக்கத்தில் தேடியும் ரஞ்சித் குமார் கிடைக்காததால் குடும்பத்தினர் அதிர்ச்சியில் அடைந்தனர். இந்த நிலையில் சதீஷ்குமாரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு உனது அண்ணனைக் கூலிப்படை வைத்து நான் தான் கடத்தினேன். நீ சென்னைக்கு வந்தால் மட்டுமே உனது அண்ணனை வீட்டுக்கு அனுப்புவேன், இல்லையேல் அவரை விடுவிக்க மாட்டேன் எனக் கூறியிருக்கிறார்.
அதிர்ச்சியடைந்த சதிஷ்குமார், தனது தந்தை ராமனை அழைத்துக்கொண்டு வாழைப்பந்தல் காவல்நிலையம் சென்று, தன்னை அழைக்கத் தனது அண்ணனைக் கூலிப்படையை மூலம் கடத்தி வைத்துக்கொண்டு மிரட்டுவது தொடர்பாகவும், சத்தியவாணிக்கும் தனக்குள்ள உறவு குறித்தும் கூறியுள்ளார். இதில் அதிர்ச்சியான போலிஸார் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் போலீசார் சத்தியவாணி செல்போன் என்னை வைத்து ஆய்வு செய்தபோது அவர் சென்னை பெருங்குடியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் கவிதா, தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் ஜெயகாந்தன், தலைமைக் காவலர் சரவணன், மற்றும் போலீசார் நேற்று நள்ளிரவு அங்குச் சென்று ரஞ்சித் குமாரை மீட்டனர்.
சத்தியவாணியைக் கைது செய்த போலீசார் அவரை வாழைப்பந்தல் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து ராணிப்பேட்டை டிஎஸ்பி பிரபு தலைமையில் விசாரணை நடத்தினர். விசாரணையில் சத்தியவாணிக்கு உடந்தையாக இருந்த தோழிகள் சென்னை துரைவாக்கம் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி 42, புவனேஸ்வரி 28 என இரண்டு பேரையும் கைது செய்து கடத்தலுக்குப் பயன்படுத்திய டாடா சுமோ பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.