கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 29 ஆம் தேதி இரவு கடும் மழை பெய்த நிலையில், 30 ஆம் தேதி நள்ளிரவு 2 மணியளவில் முண்டக்கை என்ற மலைக்கிராமத்தில் திடீரென நிலச்சரிவும் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சூரல்மலை, மேப்பாடி ஆகிய கிராமங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. அத்துடன் காட்டாற்று வெள்ளமும் கரைபுரண்டு ஓடியதால் மூன்று கிராமத்தில் வசித்த மக்கள், வீடுகள், வாகனங்கள் என அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டது.
மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், மண்ணுக்குள் புதைந்தும் 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். பலரின் நிலை என்ன ஆனது என்றே தெரியவில்லை. பேரிடர் மீட்புக் குழு, காவல்துறை , இந்திய ராணுவம் என அனைத்து துறைகளும் ஒன்றாக சேர்ந்து மீட்புப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளன. நிமிடத்திற்கு நிமிடம் உடல்கள் மீட்கப்பட்டு வருவதால், உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பெற்றோர்களை இழந்த பிள்ளைகள்; பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள்; குடும்ப உறுப்பினர்களைப் பிரிந்து தவிக்கும் உறவுகள் என கேரள மாநிலம் எங்கும் மரண ஓலம் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
மீட்புப் பணிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும் நிலையில், மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்தவர்களின் கடைசி நிமிடங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி பலரையும் கண்கலங்கச் செய்கிறது. அந்த வகையில், சூரல்மலை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜோஜோ - நீத்து தம்பதியினர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளார். நீத்து மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்பு நீத்துவின் வீட்டிற்குள் வெள்ளம் புகுந்துள்ளது. ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபோது வீட்டிற்கு முன்னும் பின்னும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியுள்ளது.
இதனால் செய்வது அறியாமல் தவித்த நீத்து, தான் பணியாற்றிய மருத்துவமனைக்கு போனில் தொடர்புக் கொண்டு, “நிலச்சரிவின் காரணமாக எங்கள் வீட்டில் வெள்ள நீர் புகுந்துள்ளது. எப்படியாவது எங்களைக் காப்பாற்றுங்கள்” எனக் கூறியுள்ளார். பின்னர் மீண்டும் தொடர்புகொண்டு, “வீட்டிற்கு வெளியே கடுமையான வெள்ளம்; வெளியே வரமுடியாது நிலை இருக்கிறது. நாங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவோம்” என்று கதறி அழுதுள்ளார். இதனிடையே நண்பர்கள் அவரை காப்பாற்ற சூரல்மலைக்கு வந்த போது ஆற்றின் குறுக்கே இருந்த பாலம் அடித்துச் செல்லப்பட்டதால், அவர்களும் செய்வதறியாமல் தவத்துள்ளனர்.
இந்த நிலையில் நீத்து பணியாற்றும் மருத்துவமனையில் இருந்து நீத்துவிற்கு போன் வந்தபோது, “எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள்” என்று கண்ணீர் மல்க கூறியிருக்கிறார். கணவர் மற்றும் மகன் வேறு அறையிலிருந்த நிலையில், சமையல் அறையில் நீத்து நின்றிருக்கிறார். இந்த நிலையில், அப்போது ஏற்பட்ட பயங்கரமான நிலச்சரிவின் காரணமாக வீட்டின் சமையலறை மட்டும் தனியாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. கணவரும், மகனும் வேறு அறையில் இருந்ததால் நல்வாய்ப்பாக உயிர்பிழைத்த நிலையில் நீத்து நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டார். அவரின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை.
கடைசி வரை தனது குடும்பத்தைக் காப்பாற்றப் போராடி நீத்து, நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.