மதம் மாறியதாக இரண்டு குழந்தைகளையும், அவர்களது தாயையும் கிராம முக்கியஸ்தர்கள் தாக்கியதாகவும், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்ட பெண் தனது இரு மகன்களுடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகை மாவட்டம் திட்டச்சேரியை அடுத்துள்ள கோதண்டராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தென்கோவன். இவருக்கு வசந்தி என்கிற மனைவியும் வசந்தகோவன், சாமுவேல் என்ற இரு மகன்களும் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் இந்துமதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, வாரம் தோறும் ஆலயம் சென்று பிராத்தனையில் ஈடுபட்டு வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம முக்கியஸ்தர்கள் அந்த குடும்பத்தினரை ஊர் முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவிடாமல் ஒதுக்கி வைத்ததோடு, ஊரை காலி செய்ய சொல்லியும் இடையூறு செய்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை தென்கோவன் ஊரில் இல்லாத போது, அவரது வீட்டிற்கு வந்த ஒரு சிலர் வசந்தியையும், அவரது இரு மகன்களையும் வன்மமான வார்த்தைகளை கூறி கடுமையாக திட்டி தாக்கியுள்ளனர். இதுகுறித்து வசந்தியும் அவரது குடும்பத்தினரும் திட்டச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனாலும் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மன வேதனை அடைந்த வசந்தி, தனது இரு மகன்களுடன் இன்று காலை நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து தனது மகன்கள் மீதும், தனது உடல் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொள்ள முயன்றார். அப்போது ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பிற்காகநின்றிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அங்கிருந்த குழாயில் மூவரையும் குளிக்க வைத்து விசாரனைக்காக நாகூர் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
இதனால் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இது குறித்து விசாரித்தபோது, " கிராமத்தில் அவங்கள யாரும் எதுவும் சொல்லவில்லை, அவங்க தான் தேவையில்லாம, பிரசங்கம்ங்கிற பேர்ல படிக்கிற குழந்தைகளை மடைமாற்றுகின்றனர். அதைத்தான் கண்டித்தோம் அதற்கு பொய் புகார் கூறுகிறார்." என்கிறார்கள்.