Skip to main content

‘வன்கொடுமைச் சட்டத்தை வலுவிழக்கச் செய்வதா?’- மறியல் செய்த வி.சி.க்களும் தலித் அமைப்பினரும் கைது!

Published on 10/04/2018 | Edited on 10/04/2018
prro


உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பானது, வன்கொடுமைச் சட்டத்தை வலுவிழக்கச் செய்துவிட்டதாக, இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மத்திய பிரதேசத்தில் 6 பேர், உத்தரபிரதேசத்தில் 2 பேர், ராஜஸ்தானில் ஒருவர் என, தலித் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மொத்தம் 9 பேர், போராட்டத்தின்போது உயிரிழந்திருக்கின்றனர்.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று போராட்டம் நடத்துபவர்களால் சொல்லப்படும் அந்தத் தீர்ப்பில், ‘வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் 18-வது பிரிவின் பிரகாரம், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கு காயத்தையோ, அவமதிப்பையோ இழைத்ததாக குற்றம்சாட்டப்பட்டிருக்கும் நபர்கள், முன் ஜாமீன் தாக்கல் செய்ய முடியாது. அது இப்போது இப்படி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், சீனியர் டி.எஸ்.பி. ஒருவர் விசாரித்த பிறகுதான், ஒருவர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்ய முடியும். இதனைச் செயல்படுத்தவில்லை என்றால், உச்ச நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும். முன் ஜாமீன் கேட்பதைத் தடுப்பது, அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் பிரிவு 21-ஐ மீறுவதாகும்.’ என்று விவரிக்கப்பட்டுள்ளது.
 

pro


சாதிய கொடுமைகளும் பாகுபாடுகளும் தேசம் முழுவதும் இருந்துவரும் நிலையில், வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை, நீதிமன்றம் வாயிலாக வலுவிழக்கச் செய்தது பா.ஜ.க. அரசுதான் என்று கண்டித்து, இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் – சிவகாசி சாலையில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி விருதுநகர் மாவட்ட துணைத்தலைவர் சசிகுமார் தலைமையில், சில தலித் அமைப்புகள் சாலை மறியல் நடத்தின. மத்திய அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பியபோது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அந்தச் சாலையில் 30 நிமிடங்களுக்கும் மேலாக போக்குவரத்து தடைபட்டது. சாலை மறியல் செய்த 80-க்கும் மேற்பட்டவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதே விவகாரத்தைக் கையில் எடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் ரயிலை மறிப்பதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையம் சென்றனர். அக்கட்சியினர் 20 பேரையும் தடுத்து நிறுத்தி கைது செய்தது காவல்துறை.

சார்ந்த செய்திகள்