Skip to main content

சேலத்தில் பட்டாசு வெடித்த தகராறில் இரும்பு கம்பியால் தாக்கி வாலிபர் கொலை! பதற்றம்.... போலீஸ் குவிப்பு!!

Published on 30/10/2019 | Edited on 30/10/2019

சேலத்தில் பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட குழு மோதலில், வாலிபரை இரும்பு கம்பியால் தாக்கி கொன்றனர்.
 

சேலம் அம்மாபேட்டை நதிமுல்லா மக்கான் தெருவைச் சேர்ந்தவர் அபுபக்கர் (23). வாகன டயர்களுக்கு பஞ்சர் ஒட்டும் கடையில் வேலை செய்து வந்தார். இவருடைய நண்பர் முகமது சபீர். தீபாவளி நாளன்று (அக். 27) இரவு 8 மணியளவில், முகமது சபீர், இரண்டு நண்பர்களுடன் ஒரே மோட்டார் சைக்கிளில் அம்மாபேட்டை வித்யா நகர் 8வது குறுக்கு வீதி வழியாக சென்று கொண்டிருந்தார்.

 

kk


அந்த தெருவில் இளைஞர்கள் சிலர் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அதில் ஒரு பட்டாசு முகமது சபீரின் சட்டை மீது தெறித்து விழுந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து சத்தம் போட்டார். இதனால் அங்கிருந்த இளைஞர்களுக்கும், முகமது சபீருக்கும் வாக்குவாதம்  ஏற்பட்டது. இருதரப்பும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து முகமது சபீர், தனது நண்பர்களுக்கு செல்போன் மூலம் தகவல் அளித்தார். இதையடுத்து அவருக்கு ஆதரவாக அபுபக்கர் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட நண்பர்கள் நிகழ்விடத்திற்கு வந்தனர். அதேபோல் எதிர் தரப்பினரும் செல்போன் மூலம் தகவல் கொடுத்து, பத்துக்கும் மேற்பட்ட கூட்டாளிகளை நிகழ்விடத்திற்கு வரவழைத்தனர். இருதரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. கட்டைகளாலும், கற்களாலும் தாக்கிக் கொண்டனர்.

 

asd

 

இதனால் அந்தப்பகுதியே போர்க்களம்போல் மாறியது. பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதில் அபுபக்கரும், முகமது சபீரும் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு, பலத்த காயம் அடைந்தனர். இவர்களில், அபுபக்கர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். முகமது சபீருக்கு, சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை காவல்துறையினர், நிகழ்விடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த கொலை தொடர்பாக அம்மாபேட்டை பெரிய கிணறு தெருவைச் சேர்ந்த பால் மணி என்கிற மணிகண்டன், கார்த்திக் என்கிற கார்த்தீசன், தீபக் என்கிற அஜித், கவுதம், பாலா என்கிற பாலகிருஷ்ணன் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்களில் 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, அபுபக்கரின் சடலம், உடற்கூறாய்வு முடிந்து அவருடைய வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் கொலையாளிகளை கைது செய்யும் வரை ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்து சடலத்தை இறக்க விடமாட்டோம் என்று அவருடைய உறவினர்கள் கூச்சலிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த மாநகர காவல்துறை துணை ஆணையர் தங்கதுரை, உதவி ஆணையர் ஆனந்தகுமார் மற்றும் காவல்துறையினர் அவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என்று உறுதி அளித்ததால், சடலத்தை பெற்றுக்கொண்டனர். எனினும், அந்தப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்