அணவயல் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 515 மாணவ, மாணவிகளுக்கும் தென்னங்கன்றுகளை வழங்கினார்கள் முன்னால் ஆசிரியர்கள். சேந்தன்குடி கிராமத்தில் வீட்டுக்கு வீடு மரக்கன்றுகளை நட்டனர் சமூக ஆர்வலர்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் தென்னை உள்ளிட்ட அமனைத்து மரங்களும் முற்றிலும் அழிந்துள்ளதால் கடந்த 2 மாதங்களாக அனைத்து விழாக்களிலும் மரக்கன்றுகளை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் கீரமங்கலம் அருகில் உள்ள அணவயல் லெட்சுமிநரசிம்மபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் தலா ஒரு தென்னங்கன்று வழங்கும் முயற்சியில் அணவயல் ஓய்வு தலைமை ஆசிரியர் கணேசன் தலைமையிலான ஓய்வு ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டிருந்தனர். அதன்படி சுமார் 515 தென்னங்கன்றுகளை அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் வழங்கினார்கள்.
இது பற்றி ஓய்வு ஆசிரியர் கணேசன் கூறியதாவது.. கீரமங்கலம், அணவயல், மாங்காடு, வடகாடு மற்றும் சுற்றியுள்ள சுமார் 100 கிராமங்களின் வாழ்வாதாரம் மரங்கள். அதிலும் தென்னை மரங்களே விவசாயிகளை வாழ வைத்ததுடன் விவசாயிகளின் குழந்தைகளின் படிப்பிற்கும் உதவியாக இருந்தது. அப்படியான மரங்களின் அழிவு விவசாயிகளை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் தான் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தென்னங்கன்று வழங்க திட்டமிட்டு ஓய்வு ஆசிரியர்கள் மற்றும் பொறியாளர்கள் இணைந்து ஒரு கன்று ரூ. 150 விலையில் தரமான தென்னங்கன்றுகளை வாங்கி 515 மாணவ மாணவிகளுக்கு வழங்கி உள்ளோம். இதே போல மற்ற பள்ளிகளுக்கும் வழங்கும் திட்டம் உள்ளது என்றார்.
அதே போல சேந்தன்குடி கிராமத்தில் வீட்டுக்கு வீடு மரக்கன்றுகள் நடும் பணியில் தன்னார்வ இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். கீரமங்கலம் சென்ரல் ஜேசிஸ், ஈசா யோகா, மரம் வளர்ப்போர் சங்கம் இணைந்து உள்@ர் தன்னார்வ இளைஞர்களின் உதவியுடன் வீட்டுக்கு மரக்கன்றுகளை நட்டனர். சுமார் 400 வீடுகளில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கி நடந்தது.