Skip to main content

கருக்கலைப்பு சம்பவத்தில் உயிரிழந்த பெண்... உடந்தையாக இருந்த 8 பேர் கைது!

Published on 13/07/2021 | Edited on 13/07/2021
Woman passed in abortion ... 8 accomplices arrested

 

கர்ப்பமாக இருந்து கருக்கலைப்பு செய்ய முயன்று உயிரிழந்த சுப்புலட்சுமி கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகிலுள்ள கொத்தட்டை கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தாய் தந்தையர் சிறுவயதிலேயே இறந்து விட்டதால், தனது தாத்தா பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். சுப்புலட்சுமிக்கும் அதே ஊரைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் கொளஞ்சி என்பவற்றின் மகன் வசந்தகுமாருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு நெருக்கமாகப் பழகியதன் காரணமாக சுப்புலட்சுமி கர்ப்பமாகி உள்ளார். மேலும், வசந்தகுமார் சுப்புலட்சுமி எதிர்வீட்டில் வசித்து வந்துள்ளார். சுப்புலட்சுமிக்கு அவரது உறவினர்கள் மாப்பிள்ளை பார்த்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

 

இந்த நிலையில் 8 மாத கர்ப்பிணியாக இருந்த சுப்புலட்சுமி தனது ஆண் நண்பர் வசந்தகுமாருடன் கடந்த 3ஆம் தேதி வீட்டில் யாரிடமும் சொல்லாமல் வெளியே சென்றுள்ளார். விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்து வந்த அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள ராங்கியம் கிராமத்தைச் சேர்ந்த பெண் செவிலியர் கிருஷ்ணவேணியின் உதவியை நாடியுள்ளார். இதையடுத்து கிருஷ்ணவேணி ஆண்டிமடம் அருகே உள்ள அண்ணங்காரன் குப்பம் பகுதியில் உள்ள தனது உறவினர் பொற்ச்செல்வி என்பவருடைய வீட்டிற்கு சுப்புலட்சுமியை அழைத்துச் சென்று, அங்கு வைத்து அவருக்கு மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் கருக்கலைப்பு செய்துள்ளார். இதில் சுப்புலட்சுமியின் வயிற்றிலிருந்து 8 மாத ஆண் சிசுவை இறந்த நிலையில் வெளியே எடுத்துள்ளனர்.

 

இதையடுத்து சுப்புலட்சுமிக்கு ரத்தப் போக்கு அதிகரித்துள்ளது. பயந்துபோன கிருஷ்ணவேணி ஆண்டிமடத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சுப்புலட்சுமியை கொண்டு சென்று சேர்த்துள்ளார். அங்கு சுப்புலட்சுமி பரிசோதனை செய்த மருத்துவர்கள் சுப்புலட்சுமி உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாகக் கூறியுள்ளனர். இதையடுத்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சுப்புலட்சுமியை கொண்டு சென்று சேர்த்துவிட்டு அனைவரும் எஸ்கேப் ஆகியுள்ளனர். அங்கு சுப்புலட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தகவல் கூறியுள்ளனர். அப்போது சுப்புலட்சுமிக்கு அருகே உறவினர்கள் குறித்த தகவல் தெரியாததால், இதுகுறித்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவர்கள் ஆண்டிமடம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

 

ஆண்டிமடம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீஸார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த தகவல் கொத்தட்டையில் இருந்த சுப்புலட்சுமியின் உறவினர்களுக்கு தெரிய வந்ததும் அவர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சென்று, "சுப்புலட்சுமியின் மரணத்தில் உள்ள உண்மை வெளியே வரவேண்டும், சம்பந்தப்பட்டவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்" என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானம் செய்த ஆண்டிமடம் காவல்துறையினர் அவர்களிடம் இருந்து புகாரைப் பெற்றுக்கொண்டதோடு சுப்புலட்சுமியின் இறப்புக்குக் காரணமான சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் விரைவில் கைது செய்வதாக வாக்குறுதி அளித்தனர். அதன் பிறகு அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

 

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக போலீஸார் தனிப்படையினர் தீவிர தேடுதல் முயற்சி மேற்கொண்டனர். இதையடுத்து சுப்புலட்சுமியை கருக்கலைப்பு செய்த செவிலியர் கிருஷ்ணவேணியை போலீஸார் கைது செய்தனர். அவர் மூலம் சுப்புலட்சுமியின் ஆண் நண்பரும் சுப்புலட்சுமிக்கு கரு உருவாவதற்குக் காரணமானவருமான கொத்தட்டை ஊராட்சி மன்ற தலைவர் மகன் வசந்தகுமார், அவரது அண்ணன் சஞ்சய் காந்தி மற்றும் அவரது நண்பர் சந்தோஷ் குமார், திருமூர்த்தி, கலாவதி உட்பட 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவரையும் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மூன்று பெண்களும் திருச்சி மகளிர் சிறையிலும் மற்ற ஐந்து பேரும் ஜெயங்கொண்டம் கிளை சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

இதில் கருக்கலைப்பு செய்த செவிலியர் கிருஷ்ணவேணி அவருக்கு வீடு கொடுத்து உதவி செய்த அவரது உறவினர் பொற்செல்வி, கருக்கலைப்பின் மூலம் எடுக்கப்பட்ட குழந்தையை முந்திரிக் காட்டில் கொண்டு சென்று புதைத்த செவிலியர் கிருஷ்ணவேணியின் தம்பி கர்ணன் ஆகியோரும் கைது செய்யப்பட்டவர்களில் அடக்கம். உரிய மருத்துவர் ஆலோசனை இல்லாமல் 8 மாதம் வயிற்றில் வளர்ந்த குழந்தையைக் கருக்கலைப்பு செய்வது சாத்தியமில்லாதது. அப்படிச் செய்தால் அந்தப் பெண்ணின் உயிருக்கு மிகவும் ஆபத்து என்பதை பெரும்பாலான மருத்துவர்கள் ஒப்புக் கொள்ளுகிறார்கள். இந்த நிலையில் 8 மாத கர்ப்பிணிப் பெண் சுப்புலட்சுமியை கருக்கலைப்பு என்ற பெயரில் சாகடித்துள்ளனர் என்கிறார்கள் அப்பகுதி சமூக ஆர்வலர்கள். இந்த சம்பவம் அரியலூர், கடலூர் மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்