சேலத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த இரண்டு ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
சேலம் சின்னபுதூர் மணியக்கார தெருவைச் சேர்ந்த மாதையன் மகன் ராமு (34), கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு கடந்த மார்ச் மாதம் அழகாபுரம் வன்னியர் நகரைச் சேர்ந்த தனபால் என்பவரை முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றார்.
இந்த வழக்கில் அழகாபுரம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், பிணையில் வெளியே வந்த அவர் மகேந்திரன் என்பவரை தாக்கியதுடன், அவருடைய வீட்டுக்குள் புகுந்து பொருள்களை அடித்து நொறுக்கியுள்ளார். இச்சம்பவம் நடந்த மறுநாளே ராஜி என்பவரிடம் கத்தி முனையில் 2000 ரூபாய் ரொக்கம் மற்றும் ஒரு செல்போனை பறித்துள்ளார்.

அதேபோல், உடையாப்பட்டி காந்திஜி காலனியைச் சேர்ந்த பெரியசாமி மகன் சுகன்ஹாசன் (23) என்ற ரவுடி, கன்னங்குறிச்சி காவல் சரகத்திற்குட்பட்ட காமராஜ் நகரில் ஒரு பெண்ணிடம் கத்தி முனையில் கால் பவுன் தோடு, இரண்டு செல்போன், 5000 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். இந்த வழக்கில் கைதாகி பின்னர் பிணையில் வெளியே வந்த சுகன்ஹாசன் மீண்டும் ஒரு ஜோதிடரிடம் கத்தி முனையில் நகை பறிப்பில் ஈடுபட்டார்.
இவ்விருவரும் தற்போது கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், அவர்கள் இருவரும் தொடர்ந்து சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், மக்களை அச்சுறுத்தும் வகையிலும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதால் அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர குற்றப்பிரிவு காவல்துறை துணை ஆணையர் செந்தில், மாநகர காவல் ஆணையருக்கு பரிந்துரை செய்தார்.
அதையேற்றுக்கொண்ட ஆணையர் செந்தில்குமார், மேற்படி ரவுடிகள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடிகள் இருவருக்கும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29, 2019) சார்வு செய்யப்பட்டது.