Skip to main content

டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்ட பெண்! 

Published on 05/10/2021 | Edited on 05/10/2021

 

The woman involved in the struggle  outside the office od DSP

 

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள மேலக்கல் பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கதுரை(42). இவரது மனைவி பாரதி(34). இவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

 

தங்கதுரை, வெளிநாட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது மனைவி பாரதியிடம், அவரது நகையை அடகு வைத்து வீடு கட்டுமாறு கூறியுள்ளார். கணவரின் பேச்சை நம்பி பாரதி தனது பெற்றோர் திருமணத்தின்போது போட்ட நகைகள் அனைத்தையும் அடமானம் வைத்து வீடு கட்டியுள்ளார். இந்த நிலையில், கடந்த ஆண்டு வெளிநாட்டில் இருந்து தங்கதுரை சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது நகையை மீட்டு தருமாறு கணவரிடம் கேட்டுள்ளார். அதற்கு கணவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அவ்வப்பொழுது தகராறு ஏற்பட்டுள்ளது. 

 

அதேபோல், கடந்த 26ஆம் தேதி கணவன் மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் நகை பிரச்சனையால் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தங்கத்துரை, தனது மனைவி பாரதியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ராமநத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரை போலீசார் வாங்க மறுத்ததாக கூறப்படுகிறதே. அதேபோல் பாரதியும், தனது செல்போன் மூலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முறையிட்டுள்ளார்.

 

இதையடுத்து மாவட்ட எஸ்.பி. சக்தி கணேசன், ராமநத்தம் போலீசாருக்கு பாரதி கணவர் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அதன்படி கடந்த செப்டம்பர் 27ம் தேதி பாரதி கணவர் தங்கதுரை மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், நேற்று காலை 10 மணி அளவில் திட்டக்குடி டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்த பாரதியும் அவரது தாய் வசந்தாவும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

இதுகுறித்து பாரதி கூறும்போது, “ராமநத்தம் போலீசார் என் கணவருக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். புகார் கொடுத்த என்னையே மிரட்டுகின்றனர். எனது புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனது கணவரை கைது செய்யவில்லை. எனவேதான் எனது கணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டி.எஸ்.பி. அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன்” எனக் கூறினார். 

 

பாரதியின் தர்ணா போராட்டம் குறித்து தகவலறிந்த திட்டக்குடி டி.எஸ்.பி. சிவா, பாரதியை ராமநத்தம் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து பாரதி, தர்ணா போராட்டத்தை கைவிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்