திருச்சி, காந்தி மார்க்கெட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தாராநல்லூர் கழிவுநீர் பாலம் அருகே உள்ள ஒரு கல்லறையின் முன்பு தமிழ்செல்வி(53) எனும் பெண் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சாவை சட்டவிரோதமாகக் கடந்த 21ஆம் தேதி வைத்திருந்தார். இத்தகவல், காந்தி மார்க்கெட் காவல்நிலையத்திற்கு கிடைக்கவே, காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்குச் சோதனையிட்டபோது, அப்பெண் சுமார் 5கிலோ 150கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததைக் காவல்துறையினர் கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றக் காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், தமிழ்செல்வி மீது பல்வேறு காவல் நிலையங்களில் 9 வழக்குகள் நிலுவையில் இருப்பதால், குற்ற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டி காந்தின் மார்க்கெட் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினைப் பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரைக் கைது செய்ய ஆணையிட்டார். அதனைத் தொடர்ந்து, திருச்சி மத்திய சிறையில் இருக்கும் தமிழ்செல்விக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணை சார்வு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.