“நடவடிக்கை எடுத்தால் தூக்கில் தொங்கி உயிரை விடுவேன்..”
விருதுநகர் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரியிடம் இப்படி பேசி நடவடிக்கையில் இருந்து தப்பியிருக்கிறார் ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமைக் காவலர் மாரிமுத்து.
உயிரை விடும் அளவுக்கு அப்படி என்ன விவகாரம்?
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் புறக்காவல்நிலைய பாதுகாப்பு அலுவலை மேற்கொண்டு வருபவர் தலைமைக் காவலர் மாரிமுத்து. பணி நேரத்தில் சீருடை அணிய மாட்டார். உயர் அதிகாரி அறிவுறுத்தினாலும் கேட்க மாட்டார். ஏதோ ஒரு செல்வாக்கில் காவல்துறையில் ‘கெத்து’ காட்டிவந்த அவர், பெண் விவகாரத்தில் சிக்கியதால் விசாரணைக்கு ஆளாகியிருக்கிறார். அது என்னவென்றால், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலை ஒட்டிய சன்னதி தெருவில் பட்டர் ஒருவருக்குச் சொந்தமான விடுதி ஒன்று இருக்கிறது. அந்த விடுதியில் பாலியல் தொழில் நடந்துவருவது, ஆண்டாள் கோவிலில் ‘ட்யூட்டி’ பார்க்கும் ஏட்டு மாரிமுத்துவுக்கு தெரியவந்தது. இதை வைத்துப் பணம் பண்ணலாம் என்று திட்டம் போட்ட அவர், இன்ஸ்பெக்டர் ஒருவரையும் அழைத்துக்கொண்டு சோதனை என்ற பெயரில் அந்த விடுதிக்குச் சென்றார். அங்கு பாலியல் தொழில் ஈடுபட்ட இளம் பெண் சிக்கிவிட, அவளை இன்னொரு பெரிய லாட்ஜுக்கு இழுத்துச் சென்றார்கள் ஏட்டு மாரிமுத்துவும் அந்த இன்ஸ்பெக்டரும். அங்கு வைத்து, ரூ.1 லட்சம் தந்தால் விட்டுவிடுவேன் என்று பேரம் நடத்தி, ரூ.50000-க்கு இறங்கி வந்திருக்கிறார்கள் இரு காக்கிகளும். இதையறிந்த பாலியல் தரகர் ஒருவர், விருதுநகர் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு சென்றார். பாலியல் தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டுவது குறித்து இரு காக்கிகளிடமும் விசாரிக்கும்படி அந்த உயர் அதிகாரி உத்தரவிட, ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்துறை அதிகாரி விசாரணை நடத்தினார். அப்போது, அந்தப் பெண், ரூ.50000 கேட்டு மிரட்டினார் என்று ஏட்டு மாரிமுத்துவைக் கை காட்டியிருக்கிறாள்.
விஷயத்தை அறிந்து ‘அட கேவலமே’ என்று நொந்துகொண்ட விருதுநகர் மாவட்ட காவல்துறை அதிகாரி, மாரிமுத்துவை ‘சஸ்பெண்ட்’ செய்வதென்று முடிவெடுத்தார். ஆனாலும், மாரிமுத்துவின் மீது கரிசனம் கொண்டு, சிவகாசி ஆயுதப்படை பிரிவுக்கு இடமாற்றம் செய்தார். மாரிமுத்துவோ “என் மீது புகார் அளித்தவர் வீட்டில் உள்ள ஃபேனில் கயிறு மாட்டி தூக்கில் தொங்கி உயிரை விடப்போகிறேன்.” என்று திரும்பத் திரும்ப கெஞ்சியிருக்கிறார். உயர் அதிகாரியும் மனமிரங்கி, ஏற்கனவே பார்த்த கோவில் பாதுகாப்பு பணியைத் தொடர்வதற்கு உத்தரவிட்டிருக்கிறார். பாலியல் தொழிலாளியிடம் பேரம் நடத்தியபோது உடன் இருந்த காவல்துறை ஆய்வாளர், நடவடிக்கை என்ற பெயரில், இடைத்தேர்தல் நடக்கும் ஒட்டப்பிடாரத்துக்கு, 10 நாட்கள் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. ராஜாவை தொடர்புகொண்டோம். “எனக்கு எதுவும் தெரியாது.” என்று லைனை துண்டித்தார். இந்த விவகாரம் குறித்து நாம் விசாரித்து வருவதை அறிந்த ஏட்டு மாரிமுத்துவின் நண்பர் ஒருவர் “மாரிமுத்து ரொம்ப நல்லவர்.” என்றார் நம்மிடம். ‘என்ன நடந்ததென்று அந்த நல்லவர் விளக்கம் தரட்டும். மாரிமுத்துவை பேசச் சொல்லுங்கள்.’ என்றோம். மாரிமுத்துவிடம் பேசிவிட்டு நம்மிடம் “மாரிமுத்து விளக்கம் அளிக்க விரும்பவில்லை. செய்தி போட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.” என்றார்.
அந்த பாலியல் தொழிலாளி கட்டிட வேலை பார்த்துவரும் வறுமைச் சூழலில் உள்ளவராம். அவரிடம் போய், ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டியிருக்கிறார்கள் காக்கிகள்.
-அதிதேஜா