
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த. வெள்ளையன் (வயது 76) உடல்நலக் கோளாறு காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நுரையீரல் தொற்று காரணமாக கடந்த மூன்றாம் தேதியிலிருந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவையடுத்து வணிகர் சங்க கொடிகள் அனைத்தும் அரைக் கம்பத்தில் பறக்க விட அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.
த.வெள்ளையனின் சொந்த ஊரான திருச்செந்தூரை அடுத்த பிச்சிவிளை கிராமத்தில் உள்ள தோட்டத்தில் அவரது தந்தையின் கல்லறைக்கு அருகே அவரது உடல் நாளை (10.09.2024) மாலை அடக்கம் செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வெள்ளையன் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.

வணிகர் பெருமக்களின் நலனுக்காக உழைத்த அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.