கரோனா எனும் கொடிய நோயில் இருந்து மீண்டு வருவதற்குள், கருப்பு பூஞ்சை எனும் நோயினால் இறப்புகள் துவங்கியிருப்பது பொதுமக்களை அதிர்ச்சி அடையவே செய்திருக்கிறது.
மயிலாடுதுறை வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் முத்து. அவர் சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உதவியாளராக இருந்துவருகிறார். அவரது மனைவி மீனா. 44 வயதான மீனா, சீர்காழி கூட்டுறவு மருந்தகத்தில் மருந்தாளுநராக இருந்துவந்தார். கடந்த மாதம் 12ஆம் தேதி மீனாவுக்கு கரோனா தொற்று உறுதியாகி, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
வீடு திரும்பிய மீனாவிற்கு ஆறாவது நாளிலிருந்து இடது கண்ணில் பார்வை குறைவும், புருவத்தில் கடுமையான வலியும் ஏற்பட்டிருக்கிறது. வலியோடு தவித்த மீனாவை மயிலாடுதுறை மருத்துவர்களின் ஆலோசனைப்படி சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மீனாவை பரிசோதித்த மருத்துவர்கள், கருப்பு பூஞ்சை நோய் இருப்பதை உறுதிசெய்தனர்.
அதனைத் தொடர்ந்து கடந்த 14ஆம் தேதி அவரது இடது கண் மற்றும் மேல் கன்னத்தில் சில பகுதிகள் அகற்றப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தச் சூழலில் நேற்று முன்தினம் (25.05.2021) சிகிச்சை பலனின்றி மீனா பரிதாபமாக உயிர் இழந்தது அவரது உறவினர்களையும் பொதுமக்களையும் கலங்கடித்திருக்கிறது. மீனாவின் உடலை உறவினர்கள் மயிலாடுதுறை எடுத்துவந்து தகனம் செய்துள்ளனர். கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பியிருக்கிறது.