Skip to main content

கடன் கொடுத்தது கலெக்டர் இல்ல நான் பணத்தை கட்டு-தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது பெண் புகார்

Published on 27/12/2018 | Edited on 27/12/2018

ஆட்சியர் உத்தரவை மதிக்காமல் வசூலுக்கு வந்து மிரட்டிய தனியார் நிதி நிறுவன மேலாளர் மீது காவல் நிலையத்தில் சுயஉதவிக்குழு பெண் புகார் அளித்துள்ளார்.

 

புயலால் பாதிக்கப்பட்டுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் நிதி நிறுவனங்கள் சுயஉதவிக்குழு கடன் தவனை செலுத்த 6 மாதகாலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட பிறகும் நிதி நிறுவன ஊழியர்கள் வசூலுக்கு வந்து மிரட்டுவதாக குளமங்கலத்தைச் சுயஉதவிக்குழு பெண் கீரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால் பரபரப்பு எற்பட்டுள்ளது.  

 

case

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்கள் கஜா புயலால் அதிகமாக பாதிக்கப்பட்டு விவசாயம் அழிந்து விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து நிர்கதியாக நிற்கின்றனர். இந்த நிலையில் சுயஉதவிக்குழு பெண்களுக்கு கடன் கொடுத்த தனியார் நிதிநிறுவனங்கள் தவனைத்தொகையை வட்டியுடன் கட்ட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

 

இந்தநிலையில் புயலால் விவசாயம் மற்றும் சிறு தொழில்களும் அழிந்துவிட்டது. அப்படியான நிலையில் வாழ்க்கை நடத்தவே சிரமமாக உள்ளதால் சுயஉதவிக்குழு கடன்களுக்கு கால நீடிப்பு செய்ய வேண்டும் என்று சுயஉதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷிடம் மனு கொடுத்தனர். அதன் பிறகு 6 மாத காலம் வரை தவனை தொகை கட்ட வேண்டாம் என்று கலெக்டர் கூறினார். அதன் பிறகும் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் வசூலுக்கு கிராமங்களுக்கு சென்று வருகின்றனர். 

 

 

அதேபோல கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த குமரசாமி மனைவி சின்னபொண்ணு (வயது 55) கீரமங்கலம் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் அறந்தாங்கியில் இயங்கிவரும் தனியார் நிதிநிறுவனத்தில் கடன் வாங்கி தவனை தவறாமல் திருப்பி செலுத்தி வருகிறேன். ஆனால் புயல் பாதிப்பால் தவனை தொகை கட்ட சிரமமாக உள்ளது. அதனால் தவனை தொகை கட்ட முடியவில்லை. இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் 6 மாதங்களுக்கு தவனை தொகை கட்ட வேண்டாம் என்று கூறியுள்ளார் என்பதை தவனை வசூலுக்கு வந்த தனியார் நிதி நிறுவன மேலாளர் ஆனந்தியிடம் சொன்னால் கடன் கொடுத்தது கலெக்டர் இல்லை நான் கொடுத்தேன் பணத்தை கட்டு என்று தகாத வார்த்தைகளில் பேசி மிரட்டினார் என்று புகார் கொடுத்துள்ளார்.

 

 

சின்னப்பொண்ணுவை புகார் கொடுக்க காவல் நிலையத்திற்கு அழைத்து வந்திருந்த மாதர் சங்கம் அபிராமி கூறும் போது.. 

 

 

புதுக்கோட்டை போல மற்ற புயல் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சுயஉதவிக்குழு கடன்களுக்கு 6 மாதம் தவனை காலம் நீடிப்பு செய்யப்பட்டுள்ளது, அதே போல தான் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரும் உத்தரவிட்டு மனு கொடுக்க சென்ற பெண்களிடம் 6 மாதம் வரை கடன் தவனை கட்ட வேண்டாம் என்று சொன்னார். ஆனால் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தரக்குறைவாக பேசி வசூல் செய்து வருகிறார்கள். இதனால் பல பெண்கள் அவமானம் தாங்க முடியாமல் மறுபடியும் யாரிடமாவது கடன் வாங்கி தவனை கட்ட வேண்டிய நிலையில் உள்ளனர். சில நாட்களுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இது சம்மந்தமாக மாவட்ட கலெக்டரை சந்தித்து முறையிட்ட போதும் கலெக்டர் தனியார் நிதி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, கடன் வசூலுக்கு வரமாட்டார்கள். மீறி வந்தால் புகார் கொடுங்கள் நடவடிக்கை எடுக்க சொல்கிறேன் என்று கூறியதால் தான் குளமங்கலத்தில் சின்னப்பொண்ணுவை மிரட்டிய தனியார் நிதி நிறுவன மேலாளர் ஆனந்தி மீது கீரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறோம் என்றார். 

 

 

மீண்டும் இதே போல மற்ற கிராமங்களிலும் பெண்கள் மிரட்டப்படுவதும், தரக்குறைவாக பேசும் சம்பவங்கள் தொடருமானால் ஜனவரி 2 ந் தேதி இந்த கோரிக்கைளை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் உள்ள சுயஉதவிக்குழு பெண்களை இணைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்