திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் ராமகிருஷ்ணனுக்கு மதுப்பழக்கம் அதிகமாக இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நாளாக நாளாக இந்த பழக்கம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக ராமகிருஷ்ணனை பிரிந்து அவரது மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் ராமகிருஷ்ணனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்தத் தகவலை அறிந்து கொண்ட கேரள மாநிலத்தைச் சேர்ந்த புரோக்கர் ஒருவர் ராமகிருஷ்ணனை தொடர்பு கொண்டு கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் புகைப்படத்தை காட்டி உள்ளார். அந்தப் பெண்ணின் புகைப்படம் ராமகிருஷ்ணனுக்கு பிடித்து போக உடனே திருமணம் குறித்து பேசுமாறு புரோக்கரிடம் கூறியுள்ளார். அந்தப் பெண்ணும் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளது.
இதனிடையே, பெண் வீட்டாரிடம் பெரிய அளவில் வசதி ஏதும் இல்லாததால் நீங்கள் தான் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என புரோக்கர் ராமகிருஷ்ணனிடம் கூறியுள்ளார். அதைக் கேட்ட ராமகிருஷ்ணன் பெண்ணிற்கு தங்க நகை போட்டுள்ளார். மேலும் ப்ரோக்கர் கமிஷனாக 80,000 கொடுத்திருக்கிறார். இதை தொடர்ந்து உடுமலை உள்ள ஒரு கோவிலில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. பின்னர் இருவருக்கும் தாராபுரத்தில் உள்ள வீட்டில் முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அப்போது, ராமகிருஷ்ணனிடம் தனக்கு மாதவிடாய் காலம் என்பதால் முதல் இரவை வேறொரு நாளில் வைத்துக் கொள்ளலாம் என கூறி இருக்கிறார். அதற்கு ராமகிருஷ்ணன் சரியென்றே கூறி இருக்கிறார்.
அடுத்த நாள் காலையில் அந்த பெண் தனது தாயார் உடல்நிலை சரி இல்லாததால் பொள்ளாச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனால் அங்கு செல்ல வேண்டுமென கூறி இருக்கிறார். ராமகிருஷ்ணனும் அந்தப் பெண்ணை பொள்ளாச்சிக்கு அழைத்து சென்று இருக்கிறார். அங்கு சென்ற உடனேயே திடீரென அந்த பெண் மாயமாக, அக்கம் பக்கத்தில் ராமகிருஷ்ணா தேடி பார்த்துள்ளார். இறுதியாக எங்கு தேடியும் கிடைக்காததால் ராமகிருஷ்ணன் தனது வீட்டிற்கு வந்து பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ராமகிருஷ்ணன் போலீசில் அந்தப் பெண்ணை காணவில்லை என புகார் அளித்திருக்கிறார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், அந்தப் பெண் நகை மற்றும் பணத்திற்காகத் தான் ராமகிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டதாகவும், அந்த புரோக்கர் அந்தப் பெண்ணின் கணவர் என்றும் கண்டுபிடித்தனர். இவர்கள் இது போன்று பல இளைஞர்களை ஏமாற்றி இருக்கக் கூடும் என்ற சந்தேகப்பட்ட போலீசார் அவர்களை தேடும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.