திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள நம்பர் ஒன் டோல்கேட் பகுதி நாமக்கல், சேலம், அரியலூர், போன்ற பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் பிரிந்து செல்கின்ற மிக முக்கியமான இடம். இச்சாலையில் நாள் ஒன்றுக்குப் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. அதனை கணிகாணித்து போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் நேற்று(15.9.2024) போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவலர் ஒருவர் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, சேலத்தில் இருந்து டால்மியாபுரம் நோக்கிச் சென்ற லாரி மீது, எதிர்பாராத விதமாக சமையல் எரிவாயு சீலிண்டர் செய்யும் இருசக்கர வாகனம் மோதியது. இதில் அதனை ஓட்டி வந்த ஒருவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பணியில் இருந்த காவலர் கீழே விழுந்த நபரை மீட்டு பத்திரமாக வழியனுப்பி வைத்துவிட்டு போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியில் ஈட்டுப்பட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அங்கே வந்த கிரிஜா என்கின்ற பெண், காவலரிடம் தான் ஒரு செய்தியாளர் எனவும், வழக்கறிஞர் எனவும் கூறி காவலரிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். மேலும், காவலரை தகாத வார்த்தைகளால் கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவலர் கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில், கிரிஜா என்ற பெண் என்னை பணியாற்ற விடாமல் தடுத்துத் தகாத வார்த்தைகளில் திட்டி அங்கிருந்த பூக்கடையில் நிழலுக்காக அமைக்கப்பட்டிருந்த குடையை எடுத்து என்னைத் தாக்க முயன்றார். மேலும், அந்த பெண் லாரி ஓட்டுநரைத் தாக்க முற்பட்டார். அதனைத் தடுக்க முயன்ற காலரான என்னை, ‘நான் உன்னை காலி செய்யாமல் விடமாட்டேன்’ என்று மிரட்டினார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கிரிஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். கிரிஜா கடந்த ஆண்டு காந்தி மார்க்கெட் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சிவகுமார் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் ஆய்வாளர் சிவகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர், பல இடங்களுக்குச் சென்று தான் ஒரு பத்திரிக்கையாளர் எனவும் வழக்கறிஞர் எனவும் கூறி பலருக்கும் தொந்தரவு கொடுத்த வருவதாகப் பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது .