குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 74 பேருக்கு பணி நியமனம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 74 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இவர்களில் 62 பேர் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்தவர்கள் ஆவர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-1 பதவிகள் அடங்கிய பணிகளில் 19 துணை கலெக்டர்கள், 26 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 4 பதவிகளுக்கான 74 பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு முதல் நிலை தேர்வு நடத்தப்பட்டு முடிவு வெளியிடப்பட்டது.
பின்னர் அந்த தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு மெயின்தேர்வு நடத்தப்பட்டது. அதன் முடிவும் வெளியிடப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு இறுதி முடிவு கடந்த 11-ந்தேதி வெளியிடப்பட்டது.
வெற்றி பெற்ற 74 பேருக்கும் நேற்று சென்னை பிராட்வே பஸ்நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. பணி நியமனம் பெற்ற 74 பேரில் 62 பேர் பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.