சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றங்களுக்கு பொறுப்பு நீதிபதியாக உள்ளார். இவர் கடந்த 8 ஆம் தேதி அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் சிறையில் திடீர் சோதனையில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைய குழு உறுப்பினர் நசீர் அகமது, திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வ சுந்தரி, தமிழ்நாடு சிறைத்துறை டி.ஜி.பி. அம்ரேஸ் பூஜாரி, உயர்நீதிமன்ற சட்டப்பணி ஆணையக்குழு செயலாளர் நீதிபதி கே.சுதா, சிறைத்துறை டி.ஜி.பி கனகரஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு அரசுக்குப் பல்வேறு கோரிக்கைகளை விடுத்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில், ‘சிறையில் உள்ள பார்வையாளர்கள் அரங்கில் கூட்டம் அலைமோதுவதால், கைதியாக சிறையில் உள்ளவர்களுக்கு தங்கள் உறவினர்களிடம் பேசக்கூட முடியவில்லை. எனவே, கூடுதலாகப் பார்வையாளர்கள் அரங்குகளை உருவாக்க வேண்டும் என்று பார்வையாளர்கள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மேலும், பார்வையாளர்கள் அரங்கு அருகே பெண்களுக்கு எனத் தனி கழிவறை வசதி இல்லை. ஏற்கனவே அங்கு உள்ள ஆண்கள் கழிவறையும் சுத்தமாக இல்லை. எனவே கழிவறை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். சிறையில் உள்ள கைதிகளுக்கு உணவுத் தரத்தை உயர்த்த வேண்டும்.
சிறையில் உள்ள பெண் கைதிகளுடன் தங்களது 6 வயது வரையிலான குழந்தைகளும் இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதனால், அந்த குழந்தைகளுக்கு பிஸ்கட், பால், மற்றும் ஆரோக்கியமான பானங்களை வழங்கச் சிறை அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். அந்த குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாமல் கஷ்டப்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அந்தக் குழந்தைகளுக்கு மழலையர் பள்ளிகளைத் துவங்க வேண்டும். அந்தக் குழந்தைகளின் பொழுதுபோக்குக்காக விளையாட்டு பொம்மைகள் உள்ளிட்டவைகளை அதிகாரிகள் வழங்க வேண்டும்.
வெளிநாட்டுக் கைதிகள் தங்கள் உறவினர்களைத் தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது. சிறை விதிகளின்படி, வெளிநாட்டுக் கைதிகள் அவர்களது உறவினர்களைச் சந்திக்க வழிவகை இல்லை. அதனால், உள்துறை செயலாளர், இதற்கு அனுமதி வழங்கும் விதமாக விதிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனையடுத்து, நீதிமன்றம் ஜாமீன் அளித்தும் பிணைத் தொகையைச் செலுத்த முடியாத காரணத்தால் சிறையில் இருக்கும் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் இருப்பது போல், சிறைக் கைதிகளுக்கு தங்கள் துணையுடன் தாம்பத்திய உரிமை வழங்கும் திட்டத்தைத் தமிழகத்திலும் செயல்படுத்துவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். மேலும், சிறைக் கைதிகளுக்குத் தேவையான மருத்துவ வசதிகளைச் செய்து தர வேண்டும்’ என்றும் கூறப்பட்டுள்ளது.