வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தை ஜூலை 17 ஆம் தேதி காலை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். அங்கிருந்த நீச்சல் குளத்தை பார்வையிட்டு வீரர்கள் - வீராங்கனைகளுடன் கலந்துரையாடினார்கள். மேலும் ரூ.10.81 கோடி மதிப்பில் அங்கு கட்டப்பட்டு வரும் புதிய விளையாட்டு உள் அரங்கை பார்வையிட்டு அதன் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தினார். இந்த ஆய்வில் அமைச்சர்கள் துரைமுருகன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் உடன் இருந்தார்கள்.
ஆய்வுக்கு பின்னர் அவர் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது காரில் ஏறிய அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அமைச்சர் வீடுகளில் தொடர்ந்து ரெய்டு நடைபெறுகிறது என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “ஏன் ரெய்டு செய்யறாங்கன்னு அவங்களத்தான் கேட்கணும், பார்க்கலாம் என்னதான் நடக்குதோ நடக்கட்டும். பொன்முடி வீட்டில் ரெய்டு நடக்குதா?, ப்ராமிஸா ரெய்டு நடப்பது எனக்குத் தெரியாது” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள், “இது பழிவாங்கும் நடவடிக்கை என நினைக்கிறீர்களா” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், “வேறுயென்ன?. என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே” எனப் பாடல் பாடி பதிலளித்தார்.