![dmk](http://image.nakkheeran.in/cdn/farfuture/tNxSdtwTyZFSNdNXe1jF8UKSQv6OdLCxUUmN2dg40qw/1663612126/sites/default/files/inline-images/n2067.jpg)
திமுக 15 வது உட்கட்சி தேர்தல் அறிவித்துள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் பதவி அருந்ததியர் மக்களுக்கு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஏனென்றால் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அருந்ததியர்கள் அதிகமாக வசிக்கும் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி, கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி, சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிகளில் ஒதுக்கப்பட்ட தனி வார்டுகளில் ஒரு அருந்ததியருக்கு கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது அருந்ததியர் மக்களிடம் பெரும் மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக கோவை மாநகர் கிழக்கு மாவட்டத்தில் அருந்ததியர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய வார்டில் கூட மற்றொரு சமூகத்திற்கு வழங்கப்பட்டது என மன வேதனையுடன் கூறுகின்றனர் அருந்ததியர் இனத்தை சார்ந்த உடன்பிறப்புகள்.
அவர்களது மன குமுறலுக்கு ஆறுதல் தரும் விதத்தில் கோவை மாநகர் மாவட்ட துணை செயலாளர் பதவி அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்தவர் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கை. இதன் வெளிப்பாடாக கோவை பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடந்த மாற்று கட்சியினர் இணைப்பு விழாவின் போது மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் திப்பம்பட்டி ஆறுச்சாமி பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக தமிழக முதல்வரும் கழக தலைவருமான மு.க.ஸ்டாலின் திப்பம்பட்டி ஆறுச்சாமியை நேரில் அழைத்து ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.
இதே வேளையில் கோவை மாவட்ட திமுகவில் தங்கள் சமூக மக்களுக்கான பிரதிநிதித்துவத்தை தர வேண்டுமென அருந்ததியர் சமூக மக்கள் தலைமைக்கு கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.