![Wife involved in tarna in front of husband's house!](http://image.nakkheeran.in/cdn/farfuture/4Ct_qhTlcxDEaSGAF43utlNT6kZBohJNUKVa4yKWbQU/1651991684/sites/default/files/inline-images/husband434343434.jpg)
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கிய தேன்மொழி. இவர் திருச்சி மாவட்டம், திருப்பைஞ்சிலியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்றாலும், பெற்றோர் சம்மதத்துடன், இவர்களுக்கு கடந்த 2020- ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் ரஞ்சித்குமாரின் தாய், ஆரோக்கிய தேன்மொழியைக் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, இருவருக்கும் மனகசப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் ரஞ்சித்குமார் தேன்மொழியை விட்டுப் பிரிந்து சென்று விட்டார். மேலும் விவாகரத்து நோட்டீஸும் தேன்மொழிக்கு அனுப்பி உள்ளார்.
விவாகரத்து நோட்டீசைக் கண்டதும் ரஞ்சித்குமாரைத் தொடர்புக் கொண்ட தேன்மொழி தான் திருமணத்தின் போது வரதட்சணையாகக் கொடுக்கப்பட்ட 15 பவுன் நகை, பணத்தைத் திருப்பி கொடுக்கும் படி கேட்டுள்ளார். ஆனால் அதற்கு ரஞ்சித்குமார் பிடி கொடுக்காமல், திருப்பைஞ்ஞிலியில் இருந்து துவாக்குடிக்கு சென்று குடியேறி உள்ளார். இதனையறிந்த தேன்மொழி அங்கு நேரில் சென்று கேட்டதால், அங்கிருந்து நம்பர் ஓன் டோல்கேட் பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளார்.
பல நாட்களாக அவரை தேடி அலைந்த தேன்மொழி ஒரு வழியாக அவர் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் குடியிருப்பதை அறிந்து, இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த தேன்மொழி ரஞ்சித்குமார் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு சென்று 4- வது மாடியில் உள்ள அவரது வீட்டின்
முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அவர் வருவதை அறிந்த ரஞ்சித்குமார் வீட்டைப் பூட்டி விட்டு எங்கேயோ சென்றுவிட்டார். இது குறித்து காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.