திருமணத்தை மீறிய உறவை தட்டிக்கேட்ட கணவனை கொலை செய்வதற்கு, 15 வயது மகள் உடந்தையாக இருந்த சம்பவம், போலீசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ளது குருவிநத்தம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள தெற்கு தெருவைச் சேர்ந்த சவரிமுத்து என்பவரின் மகன் தான் ஞானசேகர். இவருக்கு 42 வயதாகிறது. இவருடைய மனைவியின் பெயர் ரம்யா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்த தம்பதிகளுக்கு 14 மற்றும் 15 வயதுகளில் இரண்டு மகள்கள் உள்ளனர். குருவிநத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மீன் வியாபாரம் செய்து வந்த ஞானசேகர், அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து, தன்னுடைய குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், ஞானசேகரின் மனைவி ரம்யாவுக்கும் அதே கிராமத்தை சேர்ந்த கார்பெண்டர் கார்த்திக் என்கிற கருப்பசாமிக்கும், திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. அதே சமயம் ஞானசேகரின் மூத்த மகளையும் கருப்பசாமி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த விஷயம் ஞானசேகருக்கு தெரிய வந்துள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்த அவர், தன் மனைவியையும், மகளையும் கடுமையாக எச்சரித்துள்ளார். அதன் பிறகு குடும்பத்தில் இந்த விவகாரம் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில், ரம்யாவுக்கும், ஞானசேகருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், கடும் கோபத்துக்கு ஆளான ரம்யா, அவரது கணவரான ஞானசேகரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். அவரின் திட்டப்படி, கார்பெண்டர் கருப்பசாமியை வீட்டிற்கு வரவழைத்துள்ளனர். அதன் பிறகு, கருப்பசாமி , சுலைத்ராணி மற்றும் அவருடைய மூத்த மகள் ஆகியோர் சேர்ந்து, ஞானசேகரை இரும்பு கம்பியால் தாக்கியும், அரிவாளால் வெட்டியும் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
பின்னர் சடலத்தை ஒரு கோணி மூட்டையில் கட்டி, காரில் ஏற்றிக்கொண்டு, அச்சங்குளம் காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளனர். ஆள் நடமாட்டம் இல்லாத நேரம் பார்த்து, ஞானசேகரின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். அடுத்த நாள் காலை, அந்த வழியே சென்ற கிராமமக்கள் சிலர், பாதி எரிந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து, பசுவந்தனை போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, விசாரணையை தீவிரப்படுத்திய போலீஸார், எரிக்கப்பட்ட உடல், குருவிநத்தம் கிராமத்தை சேர்ந்த ஞானசேகர் தான் என்பதை கண்டுபிடித்துள்ளனர். அதன் பின், ரம்யா அவரது மூத்த மகள் மற்றும் கருப்பசாமி ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது, போலீசார் கேட்ட கேள்விகளுக்கு முன்னுக்கும் பின் முரணாக பதில் கூறியுள்ளனர். இதனால், போலீசாருக்கு சந்தேகம் அதிகமாகியுள்ளது. மேலும், துருவி, துருவி கேட்கவே, ஒரு கட்டத்தில் ரம்யா, தன் கணவர் ஞானசேகரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். மனைவி ரம்யாவின் திருமணத்தை மீறிய உறவை கண்டுபிடித்த ஞானசேகரை விபத்தை ஏற்படுத்தி கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். ஒரு வாரத்திற்கு முன்னர் அதற்கான ஏற்பாடுகளும் நடந்திருக்கிறது.
ஆனால், அப்போது அவர் தப்பிவிட்டார். அதன்பிறகு, சம்பவத்தன்று இரவு இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்திருக்கின்றனர். கொலைக்கு திட்டம் வகுத்து கொடுத்ததே 15 வயதே நிரம்பிய மகள் தான் என்று வாக்குமூலம் அளித்துள்ளனர். இதை கேட்ட போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வாக்குப்பதிவு செய்த போலீசார், கார்பெண்டர் கருப்பசாமி, ஞானசேகரின் மனைவி ரம்யா மற்றும் அவருடைய 15 வயது மூத்த மகள் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்துள்ளனர்.தாய், மகள் இருவரும் இணைந்து கணவனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.