தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கடந்த ஒரு மாத காலமாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இரு நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது. மேலும் வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று மாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையைப் பொறுத்த வரையில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து சுமார் 3 மணி நேரம் மிதமான மழை பெய்தது. நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை,கோடம்பாக்கம், எழும்பூர், சேப்பாக்கம், கோயம்பேடு, வானகரம், வளசரவாக்கம், இராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், சேலையூர், தாம்பரம், பெருங்களத்தூர், செம்பாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம், அடையாறு, மந்தைவெளி, கிண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாகக் கனமழை பொழிந்தது. சென்னை மற்றும் அதன் புறநகரின் ஒரு சில பகுதிகளில் விடிய விடிய மிதமான மழை பெய்தது.
மேலும் தமிழகத்தில் செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி,கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருப்பூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. புதுச்சேரியில் கரு மேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.