ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் கடந்த மே 22ஆம் தேதி பேரணி நடந்தது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். 40க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் வீட்டுக்கு நடிகர் விஜய் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சென்றுள்ளார்.
உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு ரசிகர் மன்ற நிர்வாகியோடு இருசக்கர வாகனத்தில் பின்பக்கம் அமர்ந்து சென்றார் விஜய். ஒவ்வொரு வீட்டிலும் சுமார் 15 நிமிடங்கள் இருந்து அந்த குடும்பத்தினரின் குறைகளை கேட்டறிந்த விஜய், அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு புறப்பட்டதோடு, தாமதமாக வந்ததாக நினைக்க வேண்டாம். இங்கு உள்ள சூழல், உங்களுக்கு உள்ள நெருக்கடி போன்றவைகளை கணக்கில் கொண்டுதான் வரதாமதமானது என்று கூறியதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.
''பகலில் கூட்டம் கூடும் என்பதால், நள்ளிரவில் சென்று சந்தித்து பேசியுள்ளார். ஏற்கனவே பிரபலங்கள் பகல் நேரத்தில் வந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், பத்திரிக்கையாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்தனர். பின்னர் அது பெரும் விவாதமாக மாறியது. பிரபலங்கள் வருவதை சிலர் அரசியல் பிரவேசத்திற்காக என்று விமர்சனங்களும் செய்கின்றனர் என்பதால், சத்தமில்லாமல் ஆறுதல் கூறி, நிதி உதவி அளிக்க எண்ணினார் விஜய்'' என்கிறார்கள் ரசிகர்கள்.