தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டவுடன் கரோனா நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாய் பணம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி கடந்த மாதம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதியாக முதல் தவணை 2000ரூ வழங்கப்பட்டது. இரண்டாவது தவணை தொகை 2000 ரூபாய் பணம் அதனுடன் குளியல் சோப், துணி சோப்பு, டீ தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், புளி, கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, சர்க்கரை, கோதுமை, உப்பு, ரவை, உளுந்து ஆகிய 14 பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை ஒன்றும் வழங்கப்படும் என்று அறிவித்தார். கடந்த 15ஆம் தேதி முதல் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்ததோடு சென்னையில் முன்கூட்டியே அதை துவக்கி வைத்தார்.
முதல்வர் பொதுமக்கள் மிகுந்த ஆவலோடு கரோனா நோய் பாதிப்பு காரணமாக வேலை வாய்ப்பின்றி, வருமானமின்றி தவித்து வரும் இந்த நேரத்தில் அரசு வழங்கும் இந்தப் பணமும் மளிகைப் பொருட்களும் மிகவும் உதவியாக இருக்கும் என்று ஆவலோடு எதிர்நோக்கி காத்து இருந்தனர். தமிழகத்தில் பரவலாக பணமும் மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் கடலூர் மாவட்டத்தில் இரண்டாவது தவணையாக பணம் 2000 ரூபாய் மட்டுமே அனைத்து குடும்ப அட்டைதாரருக்கும் வழங்கப்பட்டது. பெரும்பாலான ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புபை வழங்கப்படவில்லை. மாவட்டத்தில் 1420 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இந்தக் கடைகள் மூலம் ஏழு லட்சத்து 48 ஆயிரம் ரேஷன் கார்டுகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி அரசு அறிவித்த படி 7 லட்சத்து 48 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ஒரு மளிகை பொருட்கள் அடங்கியதொகுப்புபை வழங்கப்பட வேண்டும்.
ஆனால் இதுவரையில் சுமார் இரண்டரை லட்சம் பைகள் மட்டுமே கடைகளுக்கு வந்துள்ளன. சில கடைகளில் முழுமையான குடும்ப அட்டைதாரர்களுக்கு பைகள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளன. 2000 பணத்துடன் முழுமையாக பைகள் வராத பாதிக்கு மேற்பட்ட கடைகளில் சுத்தமாக பைகள் வந்து சேரவில்லை. பல்வேறு ஊர்களில் தொகுப்பு பை வழங்குவதுண்டு. மாவட்டத்தில் உள்ள கிராம மக்கள் ரேஷன் கடை ஊழியர்களிடம் சென்று மளிகை பொருட்கள் பைகளை ஏன் தரவில்லை? நீங்கள் வைத்துக் கொண்டு கொடுக்க மறுக்கிறீர்களா? அதிகாரிகளிடம் புகார் செய்வோம் என்று கோபத்துடன் கேள்வி கேட்டு வருகின்றனர். ரேஷன் கடை ஊழியர்கள் பொறுமையாக அரசிடமிருந்து எங்களுக்கு இன்னும் பைகள் வந்து சேரவில்லை வந்ததும் அனைவருக்கும் தலா ஒரு பை உறுதியாக வழங்கப்படும் என்று ரேஷன் கார்டுதாரர்களிடம் பதில் கூறி சமாளித்து வருகிறார்கள். மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை கடைகளுக்கு வந்து சேர்வதில் ஏன் கால தாமதம் என விசாரித்தபோது அரசு மளிகை பொருட்கள் தொகுப்பு தயாரித்துக் கொடுக்கும் படி 2.3. கம்பெனிகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாம்.
அந்த கம்பெனிகளில் இருந்து தொகுப்பு பைகள் தயாரித்து அனுப்புவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக சில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரே நேரத்தில் உதவித் தொகையையும் தொகுப்பு பையையும் வழங்கினால் எங்களுக்கு வசதியாக இருக்கும் பணம் வாங்குவதற்கு பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து வாங்குகிறோம் இன்னும் ஒரு முறை தொகுப்பு பை வாங்குவதற்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இது எங்களுக்கு கால விரயத்தை உண்டாக்குகிறது என வேதனை தெரிவிக்கிறார்கள். எனவே தவணை முறையில் உதவித்தொகை தொகுப்புபை வழங்குவதை தவிர்த்து ஒரே முறையில் சம்பந்தப்பட்ட கார்டுதாரர்களுக்கு தவணைத் தொகையும் மளிகை தொப்பையையும் கிடைக்கச் செய்திருந்தால் மிகவும் பயனாக இருந்திருக்கும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். அரசு மளிகைப் பொருட்களுக்கு டெண்டர் விடும் கம்பெனிகளிடம் குறிப்பிட்ட நாட்களுக்குள் 'முழுமையான பைகளை சப்ளை செய்ய வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யும்போது உறுதியாக கூறியிருக்க வேண்டாமா என்கிறார்கள் பயனாளிகள்.