
மதுரை மாவட்டம் கே.கே. நகர் பகுதியில் ஏராளமான தனியார் மழலையர் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் அந்த பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் பள்ளி ஒன்றில் ஒத்தக்கடை என்ற பகுதியைச் சேர்ந்த ஆரூத்ரா என்ற 3 வயது பெண் குழந்தை பயின்று வந்தது. இந்த குழந்தை இன்று (29.04.2025) பள்ளியின் பின்புறம் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது பள்ளிக்குப் பின்புறம் உள்ள தரைதளத்தை ஒட்டியுள்ள 15 அடி தண்ணீர் தொட்டியில் குழந்தை ஆரூத்ரா தவறி விழுந்துள்ளது.
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை ஆரூத்ரா சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக உயிருக்குப் போராடிய நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தது. அச்சமயத்தில் அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு குழந்தையைத் தண்ணீர் தொட்டியில் இருந்து மீட்டனர். அதனைத் தொடர்ந்து குழந்தை ஆருத்ரா, சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே இந்த சம்பவ குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துணை ஆணையர் அனிதா விசாரணை நடத்தினார். குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை ஆருத்ரா உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு பள்ளி உரிமையாளர் திவ்யாவை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளியில் நீர்த் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சம்பந்தப்பட்ட தண்ணீர் தொட்டி பள்ளி நிர்வாகத்தால் அஜாக்கிரதையாகத் திறந்து வைக்கப்பட்டிருந்தது. அதனால் தான் குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.