
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2025) பேசுகையில், “கடந்த ஆட்சியாளர்கள் செய்த நிர்வாக சீர்கேட்டால், நிர்வாகக் கட்டமைப்புகள் தரைமட்டத்திற்குப் போய் கட்டாந்தரையில் ஊர்ந்துகிட்டு இருந்துச்சு. ஊர்ந்து கொண்டிருந்த இந்த இழிவைப் போக்கி தலைநிமிர்ந்த தமிழ்நாட்டை உருவாக்கத் தமிழ்நாட்டு மக்கள் திமுகவை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தினார்கள். இதுவரை பார்த்தது திராவிட மாடல் அரசின் பகுதி ஒன்று (Part-1) தான். 2026இல் வெர்ஷன் 2.ஓ லோடிங் (Version 2.0 Loading) அதில் இன்னும் சாதனைகளை படைப்போம். தமிழ்நாடு வரலாறு படைக்கும்” எனப் பேசியிருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கள்ளச்சாராய ஆட்சிக்கு, கள்ளக்குறிச்சியே சாட்சி. சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள் புத்தகப் பையில் அரிவாள்களே சாட்சி. பெண்கள் பாதுகாப்பின்மைக்கு அண்ணா பல்கலைக்கழகமே சாட்சி. போதைப் பொருள் கடத்தலுக்கு திமுக அயலக அணியே சாட்சி. போதையின் பாதைக்கு ரிஷிவந்தியம் திமுக இளைஞரணி கூட்டமே சாட்சி. ஸ்டாலின் மாடல் சமூக (அ) நீதிக்கு வேங்கைவயலே சாட்சி.
ஏற்கனவே (Already) ஆப்ரேஷன் கஞ்சா 2.0, 3.0, 4.0 அனைத்துமே தோல்வி (Failure). இதில் இன்று அடுத்த பதிப்பு வருகிறதாம் (Version 2.0 Loading). அதிமுக ஆட்சியில் தலை நிமிர்ந்து இருந்த தமிழ்நாட்டை, ஜாமினில் வந்தவர்க்கெல்லாம் தியாகி பட்டம் கொடுத்து தலைகுனிய வைத்ததற்கு முதலமைச்சரே சாட்சி. 2026இல் ஒரே வெர்ஷன் (version) தான். அது அதிமுக வெர்ஷன் தான். மக்கள் வருகின்ற 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் பெரிய 'ஓ' (0) வாக போட்டு பை பை ஸ்டாலின் (Bye Bye Stalin) என்று சொல்லும்போது தாங்கள் சட்டையை கிழித்துக்கொண்டு தவழ்ந்து செல்லாமல் இருந்தால் சரி” எனக்குறிப்பிட்டுள்ளார்.