Skip to main content

“சி.பி.ஐ. மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர்” - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து!

Published on 29/04/2025 | Edited on 29/04/2025

 

People are losing faith in the CBI Madurai Bench of the High Court

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில்  போலியான நபர்களுக்கு வங்கிக் கடன் வழங்கி 2 கோடி ரூபாய் அளவில் இழப்பீடு ஏற்படுத்தியதாக குற்ற்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட வங்கியின் தலைமை மேலாளர் உட்பட 13 பேர் மீது சிபிஐ ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன்படி இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் 8 பேருக்குத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. அதே சமயம் இந்த வழக்கில் இருந்து 5 பேர் விடுவிக்கப்பட்டனர். இதனையடுத்து தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய கோரி 8 பேரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.கே ராமகிருஷ்ணன், “சி.பி.ஐ. மீது பொதுமக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். சில வழக்குகளில் போலீஸ் விசாரணை வேண்டாம் எனக் கூறி சி.பி.ஐ. விசாரணை கேட்டுப் பாதிக்கப்பட்டோர் மனுத்தாக்கல் செய்கின்றனர். ஏனென்றால் சி.பி.ஐ. எந்த ஒரு நிர்ப்பந்தத்திற்கும் ஆளாகாமல் விசாரணையை மேற்கொள்ளும் எனப் பொதுமக்கள் நம்புகின்றனர். ஆனால் சி.பி.ஐ. விசாரணையில் தவறு இருப்பது தெரிகிறது. சில வழக்குகளில் முக்கிய குற்றவாளிகளை விடுவித்துவிட்டு சில நபர்கள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்வதாகப் பாதிக்கப்பட்ட தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவிக்கிறார்கள்.

சி.பி.ஐ. மீது ஊழல் குற்றச்சாட்டுப் புகார்கள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக சி.பி.ஐ. மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். சிபிஐ விசாரணை அமைப்பை யாரும் கேள்வி கேட்க முடியாது என நினைக்கின்றார்களா?” எனக் கேள்வி எழுப்பினார். மேலும், “மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு நீதிமன்றம் சில பரிந்துரைகளைச் செய்ய விரும்புகிறது. சி.பி.ஐ. விசாரிக்கும் வழக்குகளில் குற்றவாளிகளின் பெயர்களைச் சேர்ப்பது வழக்குப்பதிவு செய்வது, குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்வது என அனைத்தையும் சி.பி.ஐ.யின் இயக்குநர் கண்காணிக்க வேண்டும். அதோடு வழக்கின் விசாரணை அதிகாரியையும் கண்காணிக்க வேண்டும்” என நீதிபதி தெரிவித்தார். அதோடு இந்த வழக்கை தொடர்ந்த 8 பேருக்கும் விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்