கடந்த வருடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அதிமுகவினர் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் போராட்டத்தில் ஈடுபட்ட பொழுது நீதிமன்றத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசி இருந்தார். இது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதேபோல் அதிமுக சார்பில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் விதிகளை மீறியதாக அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசைக் கண்டித்துப் போராடியதால் தன் மீது பதிவான வழக்குகளை ரத்து செய்யக்கோரி சி.வி. சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில், இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தலைமையில் நடந்த விசாரணையில், சி.வி. சண்முகத்தின் பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, 'அரசியல் போராட்டங்களில் நீதித்துறையை ஏன் இழுக்கிறீர்கள்? எந்தக் கட்சி என நீதிமன்றங்கள் பார்ப்பதில்லை. நீதித்துறையைப் பொறுத்தவரை ஒரே ஒரு அரசு தான். இதுபோன்ற பேச்சுக்களால் நீதிபதி அச்சுறுத்தப்பட்டுள்ளார்; மிரட்டப்பட்டுள்ளார்' எனத் தெரிவித்த நீதிபதி, 6 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததைச் சுட்டிக்காட்டி அந்த வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிட்ட நீதிபதி, சி.வி. சண்முகம் மீதான 2 வழக்குகளில் ஆறு வாரங்களில் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டார்.