
மதுவிலக்கு கொள்கை பிரச்சாரம் மேற்கொள்ள மோட்டார் சைக்கிள் பேரணிக்கு அனுமதி வேண்டும் என பாமக சார்பில் ராணிப்பேட்டை காவல்துறையில் அனுமதி கோரப்பட்டது. ஆனால் காவல்துறை இதற்கு அனுமதி கொடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்ட பாமக செயலாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், மாரத்தான் ஓடுவதற்கும் நடப்பதற்கும் காவல்துறை அனுமதி வழங்கும்போது மதுவுக்கு எதிரான பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கினால் என்ன? எனக் காவல்துறைக்கு கேள்வி எழுப்பினார். மேலும் ஆளும் கட்சியினருக்கு மட்டும்தான் காவல்துறை அனுமதி வழங்குகிறதா? எனவும் கேள்வி எழுப்பினார்.
யாருக்காக காவல்துறையினர் உள்ளனர். ஆளுங்கட்சியினருக்காகவா அல்லது பொது மக்களுக்காகவா என்று கேள்வி எழுப்பிய நீதிபதி ஜெயச்சந்திரன், வருமான வரித்துறை அமலாக்கத்துறை ஆகியவை சோதனைக்கு வந்தால் மத்திய அரசின் ஏஜென்ட்கள் எனக் குற்றம் சாட்டும் பொழுது தமிழக காவல்துறை யாருடைய ஏஜென்டாக செயல்படுகிறது என்றும் வினவினார்.
ராணிப்பேட்டையில் பாமகவின் மதுவிலக்கு கொள்கை பிரச்சார பேரணிக்கு அனுமதி மறுத்தது குறித்து பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு இதுவரை யாருக்கும் அனுமதி வழங்கவில்லை என்றால் டிஎஸ்பி நேரில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் 17 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.