தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டம் வன்முறையில் தொடர, இதுவரை ஒன்பது பேர் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இறந்துள்ளனர். இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில்,
ஸ்டெர்லைட் ஆலைக்காக சட்டத்தை ஏவுவது என்பதும், வணிக வெற்றிக்காக மனித உயிர் போனாலும் பரவாயில்லை என்ற எண்ணக்கூடியதும் உண்மையில் கண்டிக்கத்தக்கது.
இந்த துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் வயதுகளை பார்த்தால் எல்லாம் இளம் வயது மற்றும் மூத்தவர்கள் என கிட்டத்தட்ட பத்துபேர் இறந்துள்ளனர் என்பது எனக்கு வந்துள்ள செய்தி. இதில் வெனிஸ்டா என்ற பெண், பள்ளி தேர்வை முடித்துவிட்டு முடிவுக்காக காத்திருந்த பெண் அவரும் கொல்லப்பட்டிருக்கிறார். இந்த சோகத்தை, இந்த துரோகத்தை தமிழக மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.
வன்முறை என்ற வார்த்தையை சொல்லி நாங்கள் துப்பாக்கி சூடு நடத்தினோம் என்று சொல்லப்போகிறார்கள். என்னை கேட்டல் அந்த துப்பாக்கி சூடை நடத்த ஆணை பிறப்பித்தவர்கள் யார்?
இதுவரை பேச்சுவார்த்தைக்கு கொண்டு போகாமல் இதை துப்பாக்கி சூட்டிற்கு கொண்டு போகலாம் என அனுமதி அளித்தது யார்? இது எங்கள் மக்கள் நீதி மய்யத்தின் கேள்வி மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களின் கேள்வியும் கூட... இதற்கு பதில்சொல்லியே ஆகவேண்டும்.
இதற்கு மேலதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்யக்கூடாது அது தீர்வல்ல. இத்தகைய சம்பவம் மேலிடத்தின் அனுமதியின்றி நடந்திருக்க வாய்ப்பில்லை. இந்த அரசு வன்முறையை மக்கள் நீதி மய்யம் வன்மையாக கண்டிக்கிறது. இறந்தவர்களின் குடும்பதிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்....
என இந்த துப்பாக்கி சூட்டிற்கு கமலஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.