சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று (22/03/2022) பிற்பகல் 03.00 மணிக்கு இலங்கை நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "இந்தியாவிடம் இருந்து கோடான கோடி ரூபாயைக் இலங்கை கடனாகப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். அண்மையில் கூட ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கொடுத்துக் கொண்டிருந்தால், இலங்கை மீளுமா என்று ஒரு கேள்வி எழுகிறது. கொடுக்க வேண்டிய தேவை இருப்பதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் கொடுத்துக் கொண்டிருப்பதற்கு, இந்த சிங்கள ஆட்சியாளர்கள், இந்தியாவிற்கு நன்றியாக இருப்பார்களா, இல்லையா என்றால், ஒருபோதும் இல்லை என்ற பதிலை தான் எதிர்பார்க்க முடியும்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு கரோனா காரணமில்லை. இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் தொடர்ச்சியாக பல்லாயிரம் கணக்கில் ஊழல்கள், மோசடிகள் தான். நல்லாட்சி என்று சொல்லப்பட்ட ரணில்விக்கிரமசிங்கே, மைத்திரிபால சிறிசேனா ஆட்சியாக இருக்கட்டும், இலங்கையில் மத்திய வங்கிலேயே கோடான கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டன. இன்று வரை அதற்கான சம்மந்தப்பட்ட மத்திய வங்கி ஆளுநர் இன்னும் வெளிநாட்டிலே தலைமறைவாக இருக்கிறார். அவரை கைது செய்யவில்லை" என்றார்.