தூத்துக்குடி மாவட்டத்தின் சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமையிலான போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டு கோவில்பட்டி சப்- ஜெயிலில் உயிரிழந்தனர். தேசத்தை உலுக்கிய இந்த வழக்கை நீதிமன்ற உத்தரவுப்படி சி.பி.சி.ஐ.டி.யினர் விசாரித்து வருகின்றனர். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்களான ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், பால்துரை உள்ளிட்ட 10 காவலர்கள் சி.பி.சி.ஐ.டி.யினரால் கைது செய்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததால் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
இதனிடையே சி.பி.ஐ.யின் டெல்லி டிடாட்ச்மெண்ட் பிரிவின் ஏ.டி.எஸ்.பி. விஜய்குமார் சுக்லா தலைமையிலான 7 பேர்கொண்ட சி.பி.ஐ. குழுவினர் டெல்லியிலிருந்து மதுரை வந்து பின் தூத்துக்குடியின் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு நேற்று (10/07/2020) இரவு 07.00 மணி அளவில் வந்தனர்.
அவர்களிடம் சி.பி.சி.ஐ.டியினர் வழக்குத் தொடர்பான ஆவணங்களை ஒப்படைத்தனர். தற்போது இவைகளை ஆய்வு செய்துவரும் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று (11/07/2020) களமிறங்க உள்ளனர்.