ஒன்றியக்குழு தலைவர் பதவியை பிடிப்பதில் திமுகவினருக்கிடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. ஆட்கடத்தல், போராட்டம், பணபேரம், மதுவிருந்து என ஜரூராக போய்க்கொண்டிருப்பதை கட்டுப்படுத்த முடியாமல் மாவட்ட நிர்வாகிகள் திணறிக்கொண்டிருக்கின்றனர்.
நாகை மாவட்டம் சீர்காழி ஒன்றியத்தில் 21 கவுன்சிலர் பதவிகள் உள்ளன. ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக 9 இடங்களிலும், அதிமுக 7 இடங்களிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இதனையடுத்து சீர்காழி ஒன்றிய குழு தலைவர் பதவியை கைப்பற்ற 20வது வார்டில் வெற்றி பெற்ற திமுகவை சேர்ந்த மாநில பொதுக்குழு உறுப்பினரான தேவேந்திரனின் மனைவி கமலாஜோதியும், பத்தொண்பதாம் வார்டில் வெற்றி பெற்ற திமுக மாவட்ட பொருளாளர் எஸ்.என்.ரவியின் மனைவி மதுமிதாவும், 1வது வார்டில் வெற்றிபெற்ற திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரனின் மனைவி உஷாநந்தினிக்கும் இடையே மும்முனைப்போட்டி இருந்து வருகிறது.
இந்தநிலையில் கமலஜோதியின் கிராமம் திமுக தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்காவின் ஊருக்குப் பக்கத்தில் இருப்பதால் அவரது உறவுகள்மூலம் தலைவர் பதவிக்கு முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் தெரிந்து அதிருப்தியடைந்த மதுமிதாவின் ஆதரவாளர்கள், திருவெண்காட்டில் உள்ள துர்கா உறவினர்கள் வீட்டிற்கு முன்பு குவிந்தனர்.
இந்த தகவலை அறிந்த சீர்காழி டிஎஸ்பி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதற்கிடையில் இந்த தகவலை தெரிந்து கொண்ட திமுக மாவட்ட துணை செயலாளர்களான ஞானவேலனும், தம்பி சத்தியேந்திரனும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கட்சிக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர், "இது நம் கட்சி பிரச்சனை நாமே பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும், இதை வீதிக்கு கொண்டு வந்தது தவறு என பேசி சமாதானப்படுத்திவிட்டு செம்பனார்கோயிலில் பேச்சுவார்த்தை நடத்த புறப்பட்டு சென்றனர்.
இதற்கிடையில் சுயேட்சைகளை பாஜக பிரமுகர் ஒருவர் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, இரு கட்சியிலும் பேரம் பேசுவதாகவும் செய்திகள் கசியத் தொடங்கியுள்ளன.